×

நெற்பயிரில் 2 வகை நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன: விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்

திருவள்ளூர்: நெற்பயிரில் 2 வகை நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன என்று விதைப்பரிசோதனை நிலைய அலுவலர் வேளாண்மை அலுவலர் வே.சுகுணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :- நெற்பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளில் 2 வகைகள் உள்ளன. அவை இரை விழுங்கிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகும்.

நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சிகளை அழிப்பதே இதன் முக்கியமான அம்சம். நெற்பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், பெரிய தட்டான், ஊசித் தட்டான், தண்ணீர் நாவாய்பூச்சிகள், மிரிட் நாவாய்பூச்சிகள், நீள்கொம்பு, வெட்டுக்கிளி, ஸ்டபைலினிட் வண்டு, பொறிவண்டு, பிரகான் ஒட்டுண்ணி, அப்பாண்டிலஸ் ஒட்டுண்ணி, பிரகானிட்குளவி, டாகினிட் ஈ போன்ற இயற்கையான எதிரிகள் தான் நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது. முதலில் இரை விழுங்கிகளை பற்றி பார்க்கும்போது, ஒரு நாளில் கிட்டத்தட்ட 20 விதமான தீமைசெய்யும் பூச்சிகளை இவை உண்ணும்.

இதில் குள்ளசிலந்தி, நீள்தாடை சிலந்தி, ஓநாய் சிலந்தி, முள்சிலந்தி, கருப்பு விதவை சிலந்தி என பலவகைகள் உள்ளன. இவை நெல்வயலில் உள்ள இலைச்சுருட்டு புழு குருத்துப் பூச்சிகளின் அந்துப்பூச்சிகள், கூண்டுப்புழுக்கள், புகையான், பச்சை தத்துப்பூச்சிகள் ஆகியவற்றை உண்ணும். மிரிட் நாவாய் பூச்சிகள் நெற்பயிரில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் புகையான்களை கட்டுப்பாட்டில் வைக்கும். பெரிய தட்டான் பூச்சிகள் பொதுவாக நெல் வயல்களில் மாலை நேரங்களில் தான் அதிகமாக காணப்படும்.

இவை நெற்பயிரில் உள்ள கூண்டுப்புழுக்களை உண்ணும். இதேபோல் ஊசித்தட்டான்களும் செயல்படும். பொறி வண்டுகளிலும் பலவகைகள் உள்ளன. இவை நெற்பயிரில் உள்ள மாவுப் பூச்சிகளை அழிக்கின்றன. மேலும் ஒட்டுண்ணிகளை பற்றி பார்க்கும் போது, பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளில் இறைவிழுங்கிகள் மாதிரியே ஒட்டுண்ணிகளின் பங்கும் முக்கியமானது. இவற்றில் டிரைகோ கிரமா, பிரகான் ஒட்டுண்ணி, அப்பாண்டிலஸ் ஒட்டுண்ணி, டாகினிட் ஆகிய ஒட்டுண்ணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதில் டிரைகோகிரமா போன்ற முட்டை ஒட்டுண்ணிகள் இனவிருத்தி செய்யப்பட்டு பயிர்களில் விடப்படுகின்றன. டிரைகோகிரமா ஜப்பானிகம், டிரைகோகிரமா கைலோனிஸ் ஆகிய முட்டை ஒட்டுண்ணிகள் நெற்பயிரில் உள்ள இலைச்சுருட்டு புழு, குருத்துப் பூச்சிகள் ஆகியவற்றை அழிக்கின்றன. இதுவரை நாம் பார்த்த நன்மை செய்யும் பூச்சிகள் வயல்களில் இயற்கையாகவே இருக்கும். இதை நாம் அழிக்காமல் பாதுகாத்து தீமைசெய்யும் பூச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நெற்பயிரில் 2 வகை நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன: விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Seed ,Testing Station Officer ,Agriculture Officer ,V. Sukuna ,Seed Testing Station Officer ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை