×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் சுற்றுலா வாகனம்: கலெக்டர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்

திருவள்ளூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் சுற்றுலா வாகனத்தை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி, விடுதி மாணவர்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாக 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின‌ விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை சார்பாக நேற்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா வாகனத்தை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்த சுற்றுலாவானது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. பின்னர் சென்னையில் உள்ள எழும்பூர் அரசு அருங்காட்சியம் மற்றும் ரயில் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக மாணவர்கள் இதில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சுற்றுலாவின் முக்கிய நோக்கமே பள்ளி மாணவ, மாணவியரிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுதான். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றுலாவின் போது மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு மற்றும் காலை, மாலை ஆகிய நேரங்களில் காபி, டீ வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ்.ராஜாராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்ஸிலியா, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம், பள்ளிகளின் ஆய்வாளர் சவுத்ரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

*குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் வரும் 14ம் தேதி கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருவள்ளூர் வட்டம் கம்மார்பாளையம் நியாய விலை கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் எல்லாபுரம் நியாய விலை கடை அருகில், பூந்தமல்லி வட்டம் மேட்டுப்பாளையம் நியாய விலை கடை அருகில், திருத்தணி வட்டம் இலுப்பூர் நியாய விலை கடை அருகில், பள்ளிப்பட்டு சின்ன அத்திமஞ்சேரி நியாய விலைக்கடை அருகில், பொன்னேரி வட்டம் அரியன்வாயல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி வட்டம் சணாபுத்தூர் நியாய விலை கடை அருகில், ஆவடி வட்டம் திருநின்றவூர் ‘ஆ’ கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆர்.கே. பேட்டை வட்டம் வீரமங்கலம் நியாய விலைக்கடை அருகில் ஆகிய இடங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் சுற்றுலா வாகனம்: கலெக்டர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Alby John Varghese ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...