×

உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா – ஆப்கான் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடர ரோகித் மற்றும் கோ முனைப்பு

டெல்லி: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரில் இரு அணிகளுக்கும் இது 2வது லீக் ஆட்டம். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸி.யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இலக்கை விரட்டும்போது 3 முன்வரிசை வீரர்கள் டக் அவுட்டானதால் ஆரம்பத்தில் தட்டு தடுமாறினாலும் கோஹ்லி – ராகுல் பொறுப்பாக விளையாடி அணியை கரை சேர்த்தனர். முதல் போட்டியில் ஏமாற்றமளித்த ரோகித், ஷ்ரேயாஸ், இஷான் நல்ல ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் கில் களமிறங்க முடியாதது சற்று பின்னடைவுதான். ஷமி, ஷர்துல் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஷ்ரேயாசுக்கு பதிலாக சூரியகுமாரை சேர்ப்பது குறித்தும் இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஹஸ்மத்துல்லா தலைமையிலான ஆப்கான் அணியும் இந்த உலக கோப்பையில் ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. ரகமத்துல்லா, ரகமத் ஷா, இப்ராகிம் ஆகியோருடன் பந்துவீச்சாளர்கள் ரஷித் கான், நவீன் உல் ஹக், பசுல்லா பரூக்கி, முகமது நபி ஆகியோர் இந்தியாவை மிரட்ட காத்திருக்கின்றனர். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்ய இந்தியாவும், முதல் வெற்றிக்காக ஆப்கனும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

நேருக்கு நேர்
* இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் மட்டுமே மோதியுள்ளன. 2ல் இந்தியா வென்றுள்ள நிலையில், ஒரு ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்துள்ளது.
* 2014ல் மிர்பூரில் நடந்த ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா 106 பந்துகளை மீதம் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
* 2018ல் துபாயில் நடந்த ஆசிய கோப்பை லீக் ஆட்டம் ‘டை’ ஆனது. ஆப்கான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன். இலக்கை விரட்டிய இந்தியா 49.5 ஓவரில் அதே 252 ரன்னுக்கு ஆல் அவுட்.
* 2019ல் சவுத்ஹாம்ப்டன் நகரில் நடந்த உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஒரு ஆட்டம் தான் இரு அணிகளும் ஐசிசி உலக கோப்பையில் விளையாடிய ஆட்டம்.
* ஆசிய, உலக கோப்பை தவிர, சர்வதேச ஒருநாள் தொடர்களில் இரு அணிகளும் மோதியதில்லை.

டெல்லி அரங்கில்
* டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக ஷமி (7), 2வது வீரராக ஜடேஜா (6), 5வது இடத்தில் குல்தீப் (5) உள்ளனர். மற்றவர்களில் 4 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
* டெல்லி அரங்கில் அதிக ரன் குவித்த முதல் 10 வீரர்களில் 7வது இடத்தில் உள்ள கோஹ்லி மட்டுமே இந்திய அணியில் இருக்கிறார். மற்ற 9 பேரில் 6 பேர் வெளிநாட்டு வீரர்கள். மீதி 3 இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்.
* இங்கு இதுவரை நடந்துள்ள 27 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 21ல் விளையாடி உள்ளது 13ல் வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.
* டெல்லி அரங்கில் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக விளையாடுகிறது.

இந்தியா: ரோகித் (கேப்டன்), ஹர்திக் (துணை கேப்டன்), அஷ்வின், பும்ரா, இஷான், ஷ்ரேயாஸ், ஜடேஜா, கோஹ்லி, குல்தீப், ஷமி, சிராஜ், கே.எல்.ராகுல், ஷர்துல், சூரியகுமார், கில் (காய்ச்சலால் ஓய்வு).
ஆப்கானிஸ்தான்: ஹஷ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), அப்துல் ரஹ்மான், அஸ்மதுல்லா உமர்ஸாய், பஸல்லாக் பரூக்கி, இப்ராகிம் ஸத்ரன், இக்ரம் அலிகில், முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நஜிபுல்லா ஸத்ரன், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரகமதுல்லா குர்பாஸ், ரகமத் ஷா, ரஷித் கான், ரியாஸ் ஹாசன்.

The post உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா – ஆப்கான் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடர ரோகித் மற்றும் கோ முனைப்பு appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket ,India ,Rohit and Co ,Delhi ,Afghanistan ,ICC World Cup ODI ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!