×

140 ரன் விளாசினார் மலான் வங்கதேசத்துக்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி: பந்துவீச்சில் அசத்தினார் டாப்லி

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், வங்கதேச அணியுடனான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 137 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. பேர்ஸ்டோ, மலான் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. பேர்ஸ்டோ 52 ரன் (59 பந்து, 8 பவுண்டரி) விளாசி ஷாகிப் ஹசன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து மலான் – ரூட் ஜோடி வங்கதேச பந்துவீச்சை பதம் பார்த்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 151 ரன் சேர்த்து அசத்தினர். மலான் 140 ரன் (107 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் பட்லர் 20, ஜோ ரூட் 82 ரன் (68 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஹாரி புரூக் 20 ரன், சாம் கரன், அடில் ரஷித் தலா 11, வோக்ஸ் 14 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன் குவித்தது. வுட் 6, டாப்லி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் மஹெதி ஹசன் 4, ஷோரிபுல் 3, டஸ்கின், ஷாகிப் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 365 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 8.3 ஓவரில் 49 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. ரீஸ் டாப்லியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டன்ஸிட் (1), ஷான்டோ (0), கேப்டன் ஷாகிப் (1) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். மிராஸ் 8 ரன் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

இந்த நிலையில், லிட்டன் தாஸ் – முஷ்பிகுர் ரகிம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது. லிட்டன் 76 ரன் (66 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), முஷ்பிகுர் 51 ரன், தவ்ஹித் 39 ரன் விளாசி வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். வங்கதேசம் 48.2 ஓவரில் 227 ரன் மட்டுமே எடுத்து 137 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து தரப்பில் டாப்லி 4, வோக்ஸ் 2, கரன், வுட், அடில், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மலான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post 140 ரன் விளாசினார் மலான் வங்கதேசத்துக்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி: பந்துவீச்சில் அசத்தினார் டாப்லி appeared first on Dinakaran.

Tags : Malan ,England ,Bangladesh ,Tapley ,Dharamsala ,ICC World Cup ODI ,
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்