×

காசா மீது 4வது நாளாக குண்டுவீச்சுக்கு பதிலடி இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்: எல்லை நகரில் ராக்கெட்களை ஏவியதால் பதற்றம்

* தலைநகர் டெல் அவிவில் சைரன் ஒலியால் பீதி

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் 4வது நாளாக வான்வழி தாக்குதலை நடத்தியது. எல்லையை ஒட்டிய இஸ்ரேல் நகரமான அஷ்கெலோன் மீது ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்களை ஏவினர். இதனால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். எல்லை தாண்டி இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்கள் பலரை சுட்டுக் கொன்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வெளிநாட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ளது. காசாவை இஸ்ரேல் போர் விமானங்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 4வது நாளாக நேற்றும் காசாவின் பல பகுதிகளையும் குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள், டிரோன்கள் குண்டுமழை பொழிந்தன.

600 போர் விமானங்கள் மற்றும் 300 ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் இஸ்ரேல் வரலாறு காணாத தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த இடைவிடாத தாக்குதலால் காசாவின் தெற்கு பகுதி நகரங்கள் தரைமட்டமாகி உள்ளன. காசா சிட்டி உள்ளிட்ட நகரங்களில் மசூதிகள், அரசு கட்டிடங்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் சுக்கு நூறாக்கப்பட்டுள்ளன. காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், அப்பகுதிக்கான மின்சாரத்தை நிறுத்தி, உணவு, குடிநீர் செல்வதையும் தடுத்துள்ளது. இதனால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பலரும் தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 150 ராணுவ வீரர்கள் உட்பட 1000 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா தரப்பில் பலி எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. 4,000க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேலுக்குள் நுழைந்த 1,500 ஹமாஸ் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

இடைவிடாத தாக்குதலால் காசாவில் 1.8 லட்சம் பொதுமக்கள் வீடுகளை இழந்து ஐநாவின் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், காசாவை 2007ல் ஹமாஸ் கைப்பற்றிய பிறகு நடந்த 4 போரில் இல்லாத வகையில் இம்முறை ஐநா பாதுகாப்பு முகாம்களாக உள்ள பள்ளிகள் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. காசா சிட்டியில் உள்ள ஐநா தலைமை அலுவலக கட்டிடமும் குண்டுவீச்சில் சேதமடைந்துள்ளது. இதனால் தங்களுக்கான பாதுகாப்பு இடங்கள் சுருங்கி வருவதால் காசா மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் வெறும் ஆரம்பம் தான் என நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ‘‘ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம். நம் எதிரிகளுக்கு நாம் செய்யப் போவது அடுத்த பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும்’’ என சபதமிட்டுள்ளார்.

காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதால் எந்த இடத்திலும் ஹமாசால் பதுங்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதற்கிடையே, இனியும் வான்வழி தாக்குதல் தொடர்ந்தால் பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்டு கொலை செய்வோம் மிரட்டல் விடுத்திருந்த ஹமாஸ், போர் ஓயும் வரை அவர்களை விடுவிப்பதற்கான வாய்ப்பில்லை என்று நேற்று கூறி உள்ளது. அதுமட்டுமின்றி, காசாவில் இருந்து 9 மைல் தொலைவில் உள்ள இஸ்ரேலின் அஷ்கெலோன் துறைமுக நகரை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவின் பல இடங்களில் முன்னெச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின.

இதற்கிடையே ஹமாசின் எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில், அஷ்கெலோனில் இருந்து 38 மைல் தொலைவில் அமைந்துள்ள இஸ்ரேலின் சர்வதேச பென் குரியன் விமான நிலைய ராக்கெட்களை ஏவியதாக ஹமாஸ் கூறியது. ஆனால் இதனை விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். அதே போல, அஷ்கெலோனில் பயங்கர குண்டு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்துவதால் இஸ்ரேல் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அஷ்கெலோன் நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவமும் விரைந்துள்ளது.

* வெளியேறும் ஒரே வழியிலும் குண்டுவீசி தாக்குதல்

காசாவின் மொத்த பரப்பளவு வெறும் 365 சதுர கிமீ மட்டுமே. 41 கிமீ நீளமும், 12 கிமீ அகலமும் கொண்ட இப்பகுதியில் சுமார் 23 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்து சீலிட்டுள்ளது. எந்த வழியாகவும் யாரும் தப்ப முடியாது. இதில் எகிப்பை ஒட்டிய ரபா பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வழியாக மட்டுமே காசாவில் இருந்து வெளியேற முடியும். மனிதாபிமான அடிப்படையில் இவ்வழியாக எகிப்தில் அகதிகளாக முறையான அனுமதியுடன் காசா மக்கள் செல்ல முடியும். அதுவும் எளிதான காரியமல்ல. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இப்பாதையை குறிவைத்து 4 முறை இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இதனால் காசாவிலிருந்து எந்த வழியாகவும் பொதுமக்கள் வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது.

* வெண் பாஸ்பரஸ் குண்டு

காசா மீதான போரில் இஸ்ரேல் ராணுவம் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே 2008, 2009ம் ஆண்டுகளில் நடந்த சண்டையில் காசா மீது வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. இந்த வெண் பாஸ்பரஸ் சர்வதேச அளவில் தடை செய்யப்படவில்லை என்றாலும், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஏனெனில் இந்த வெண் பாஸ்பரஸ் வெடிபொருட்கள் வெடித்த உடனே 800 முதல் 2500 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை எட்டும். இதனால் ஏற்படும் தீ மனித தோல்களை மட்டுமின்றி எலும்புகளை நொடியில் பஸ்பமாக்கி விடும். ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது.

* ஏமன் அமைப்பும் மிரட்டல்

இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து ஹமாசுக்கு ஆதரவாக மற்றொரு அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எல்லையில் உள்ள இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது சிறிய அளவில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தற்போது ஏமனில் செயல்படும் ஹூதி அமைப்பும் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டால் டிரோன், ஏவுகணை கொண்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஹூதி தலைவர் அப்துல் மலேக் ஹூதி எச்சரித்துள்ளார். இதனால் காசா சண்டையில் ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுசேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

* ஹமாஸ் நிதி அமைச்சர் பலி

இஸ்ரேல் நடத்தி டிரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினரும், நிதி அமைச்சருமான ஜாவேத் அபு சலாமா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இவர் காசாவிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை நிர்வகித்து வந்தார். இதே போல, ஹமாசின் உள் தொடர்பு துறை தலைவர் ஜகாரியா அபு மொயம்மரும் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

* இஸ்ரேல் பிரதமருடன் போனில் மோடி பேச்சு

காசா மீது போர் தொடுத்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நேற்று உரையாடினார். அப்போது, பதிலடி தாக்குதலின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நெதன்யாகு விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்பு மற்றும் தற்போதைய நிலை குறித்த தகவலை விளக்கியதற்கு நன்றி கூறுகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். தீவிரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது’’ என கூறி உள்ளார்.

* தப்பிக்க வழியே இல்லை

காசாவில் சிக்கியிருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷபூ என்பவர் அனுப்பிய வீடியோ செய்தியில், ‘‘நாங்கள் இங்கு மிருகத்தனமான போரை எதிர்கொள்கிறோம். குண்டுவீச்சில் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்பின் சத்தம் மிகவும் பயமுறுத்துகிறது. முழு வீடும் நடுங்குகிறது. குடிநீர், மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் வசதியும் முழுமையாக இல்லாததால் தகவல் தொடர்பும் சிரமமாகி உள்ளது. எங்களுக்கு இங்கு எங்குமே பாதுகாப்பான இடம் இல்லை. தப்பிப்பதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. இஸ்ரேல் ராணுவம் ஒட்டுமொத்தமாக முற்றுகையிட்டுள்ளது. எகிப்தில் நுழைவதற்கான ரபா கிராசிங் பாயின்டும் மூடப்பட்டு விட்டது. ரமல்லாவில் உள்ள இந்திய பிரதிநிதியிடம் நாங்கள் ஏற்கனவே உதவி கேட்டுள்ளோம்’’ என கூறி உள்ளார். இது குறித்து ரமல்லாவில் உள்ள இந்திய பிரதிநிதி அலுவலகம் கூறுகையில், ‘‘காசாவில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் கள நிலவரம் மிக மோசமாக இருப்பதால் எங்களால் தற்போதைய சூழலில் எதுவும் செய்ய முடியவில்லை’’ என்றார்.

The post காசா மீது 4வது நாளாக குண்டுவீச்சுக்கு பதிலடி இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்: எல்லை நகரில் ராக்கெட்களை ஏவியதால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,day bombing ,Gaza ,Del Aviv ,Tel Aviv ,4th day bombing ,Dinakaraan ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...