×

ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், 100நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவை தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதிய நிலுவை தொகையினை வழங்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

மாவட்டத் துணைத் தலைவர் அன்பழகன் ஒன்றிய பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முனுசாமி மற்றும் மாவட்ட பொருளாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் ஊதிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் செங்கல்பட்டு மாவட்ட குழு, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சார்பில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலைக்கான ஊதியம் கொடுக்காமல் அசாங்கம் தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் மாவட்ட செயலாளர் தாட்சாயிணி தலைமை தாங்கினார். இதில், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக 100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்கவில்லை, எனவே, ஒன்றிய அரசு உடனே ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்து மிக பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Uttara Merur ,Uttara Merur Regional Development Office ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்