×

வேதாரண்யம், முத்துப்பேட்டை கடற்கரைகளில் சாகர்கவாச் ஒத்திகை துவக்கம்: தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவாச் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் இரு தினங்கள் நடைபெறுகிறது. ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் இன்று கடலில் படகு மூலம் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

அதேபோல் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதேபோல் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் அருகே உள்ள ஜாம்புவானோடை, செங்காங்காடு, தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு, பேட்டை, தம்பிக்கோட்டை கிழக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஒத்திகை இன்று காலை துவங்கியது. முத்துப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். முத்துப்பேட்டை கடலை ஒட்டி அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய காடான அலையாத்திக்காடு மற்றும் லகூன் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மீனவர்களின் படகுகளிலும் ஏறி விசாரணை நடத்தினர்.

The post வேதாரண்யம், முத்துப்பேட்டை கடற்கரைகளில் சாகர்கவாச் ஒத்திகை துவக்கம்: தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Sagarkavach ,Vedaranyam ,Muthuppet beaches ,Sagarwatch ,Nagai district ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...