×

சோழவரம் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பங்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சி சாந்தி நகர், வெண்மணி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. மின்கம்பங்கள் வளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால் எந்நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற உடைந்த மின்கம்பங்களை மாற்றும்படி பல முறை அலமாதி மின்சார வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வர இருக்கின்ற மழைக்காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அலமாதி சாந்தி நகர், வெண்மணி நகர், பாலாஜி நகர், பழைய அலமாதி, எடப்பாளையம், உப்பரபாளையம், ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது. பலத்த காற்றடித்தால் எந்நேரத்திலும் கீழே விழுந்து ஆபத்தை விளைவிக்கலாம். அந்த வகையில்தான் உள்ளது. மேலும் பல இடங்களில் மின்வயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளது.

சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை நேரிலும் தொலைபேசி மூலமும் புகார் செய்தும் கண்டும் காணாமல் உள்ளனர். மழைக்காலத்திற்கு முன்பாவது சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் செங்குன்றம்- திருவள்ளூர் செல்லும் சாலை அலமாதி பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

The post சோழவரம் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பங்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Cholavaram Union ,Alamathi Panchayat Shanti Nagar ,Venmani Nagar ,
× RELATED மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி