×

மனதை ஒருமுகப்படுத்த 5 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனதை ஒரு முகப்படுத்துதல் என்பது ஒரு முக்கியமான செயல்திறன் ஆகும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும், மனதையும், மூளையையும் ஒரு முகப்படுத்தி, மிகவும் கவனமாகச் செய்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்.

அது தேர்வுக்கு தயார் செய்தவாக இருந்தாலும் சரி அல்லது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி மூளையையும், மனதையும் ஒரு முகப்படுத்தி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நம்மை நாமே ஒரு முகப்படுத்த சில எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்:

நினைவாற்றல் தியானம்

நினைவாற்றல் தியானம் என்பது தற்போது பிரபலமடைந்து வரும் ஒரு வகையான தியானம் ஆகும். இந்த தியானத்தில் ஈடுபட்டால் நம்மை நாம் எளிதாக ஒருமுகப்படுத்தலாம். அதோடு நமது மன அழுத்தமும் குறையும். இந்த தியானத்தை செய்வதற்கு நாம் மூச்சு விடுவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.
நினைவாற்றல் தியானத்தை செய்வதற்கு முதலில் ஒரு அமைதியான இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அங்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாத வகையில் நன்றாக, வசதியாக அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது கண்களை மூடி, மெதுவாக ஆழமாக மூச்சு விட வேண்டும். அப்போது நமது கவனம் முழுவதும் மூச்சுவிடுவதின் மீதே இருக்க வேண்டும். நாம் உள்ளிழுத்து விடும் மூச்சானது நமது உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒருவேளை நமது கவனம் சிதறினாலும், மீண்டும் தியானத்திற்குள் வந்துவிட வேண்டும்.

நமது இலக்குகளை காட்சிப்படுத்துதல்

தினந்தோறும் நமது இலக்குகளை நமக்குள் காட்சிப்படுத்தும்போது, நமது கவனம் அதிகரிக்கும். அதற்கு, நமது இலக்குகளைக் காட்சிப்படுத்த தினமும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். பின்னர், நாம் அடைய வேண்டிய இலக்குகளை நமது மனதிற்குள் படமாக திரையிட வேண்டும். அந்த இலக்குகளை நீங்கள் அடைவதாக எண்ணிப்பாருங்கள். அவ்வாறு அடையும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது அல்லது உங்களுக்கு எந்தவிதமான உணர்வு ஏற்படுகிறது என்பதை உங்களுக்குள் உணர்ந்து பார்க்க வேண்டும். குறிப்பாக நேர்மறையான உணர்வுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நமது ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும்.

இடைவேளை எடுத்தல்

நமது வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது நமது ஒரு முகப்படுத்தலை மேம்படுத்தும். அதோடு நமது மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதன் பயனாக நமது மூளை புதுப்பிக்கப்படும். நமது வேலைகளுக்கு இடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் நமது உற்பத்தி அதிகரிக்கும். அதோடு நமது கவனமும் கூர்மையாகும். ஆகவே வேலை செய்யும் இடத்தில் இருந்து எழுந்து, சிறிது நேரம் நடக்கலாம் அல்லது தளர்வாக இருப்பதற்கான கேளிக்கை செயல்களில் சிறிது நேரம் ஈடுபடலாம். ஆனால், அவற்றில் மூளைக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது.

கவனத்துடன் கூடிய மூச்சுப் பயிற்சி

கவனத்துடன் கூடிய மூச்சுப் பயிற்சி என்பது ஒரு எளிய பயிற்சி ஆகும். இந்தப் பயிற்சி நமது மன அழுத்தத்தைக் குறைத்து, நமது ஒரு முகப்படுத்துதலை அதிகரிக்கிறது. இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு தினமும் சில மணித்துளிகளை ஒதுக்கி, நாம் மூச்சு விடுவதைக் கவனிக்க வேண்டும். அதாவது முதலில் மிகவும் மெதுவாக மூக்கின் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். பின் மெதுவாக வாய்வழியாக மூச்சை வெளியில் வெளியிட வேண்டும். அவ்வாறு மூச்சு இழுத்துவிடும்போது, நமது உடலில் என்னென்ன எதிர்வினைகள் ஏற்படுகின்றன என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

கவனச் சிதறல்களை அகற்றுதல்

கவன சிதறல்களை அகற்றினாலே, நமது கவனம் கூர்மையாகும். கவனச் சிதறல்கள் பல வடிவங்களில் வரலாம். சமூக ஊடகங்களில் இருந்து வரும் செய்திகள் முதல் நம்மைச் சுற்றி எழும் ஒலிகள் வரை நமது கவனச் சிதறல்களுக்குக் காரணிகளாக இருக்கின்றன. இந்தக் கவனச் சிதறல்களை அகற்ற, கைபேசி மற்றும் கனிணி போன்றவற்றை அணைத்து வைத்துவிட்டு, ஒரு அமைதியான இடத்தில் நமது வேலைகளைச் செய்யலாம்.நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒரு முகப்படுத்துதல் என்பது மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே மேற்சொன்ன 5 பயிற்சிகளையும் தவறாது செய்து வந்தால், நம்மை நாமே ஒரு முகப்படுத்தி, நமது பணிகளில் வெற்றி பெறலாம்.

தொகுப்பு: பொ. பாலாஜி கணேஷ்

The post மனதை ஒருமுகப்படுத்த 5 வழிகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED தவிர்க்க வேண்டிய சில உணவு சேர்க்கைகள்!