×

ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மருத்துவர் கேசவன்

உலகளவில் பரவலாக காணப்படும் நோய்களில் ஆர்த்ரைடிஸும் ஒன்று. முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டுமே ஆர்த்ரைடிஸில் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அப்படியில்லை. துடிப்பும் துறுதுறுப்பும் மிக்க இளைஞர்கள் கூட கை, கால் வலி, மூட்டு வலி என்று மருத்துவமனையை நாடுகின்றனர்.

பிரச்னை என்னவென்று பார்த்தால், ஆர்த்ரைடிஸ் என்கின்றனர். சிறிது நேரம் கூட நிற்க முடியாமல், சிறிது தூரம் கூட நடக்க முடியாமல், எந்த வேலையையும் இயல்பாக செய்ய முடியாமல் முடக்கிவிடும் இந்த ஆர்த்ரைடிஸ் பிரச்னை குறித்தும் தீர்வு குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் சிறந்த நிபுணரான மருத்துவர் கேசவன்.ஆர்த்ரைட்டிஸ் என்பது மூட்டு அழற்சி, மூட்டு தேய்மானமாவதாகும். ஆரம்பத்தில் மூட்டு வீக்கம், சவ்வு வீக்கம்தான் ஏற்படும். அது போக போக, மூட்டினுடைய மேற்பரப்பை பாதிக்கக்கூடும். அதனையே ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்கிறோம். இந்த ஆர்த்ரைட்டிஸ் பல காரணங்களால் ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸை பொருத்தவரை, சுமார் 200க்கும் மேற்பட்ட வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் பொதுவாக ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் டிஜெனரேட்டிவ் பிரச்னையும் ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் ரத்தத்தில் ஏற்படும் குறைபாட்டால் வரும் ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையும் முக்கியமானவை. இவைதான் பெரும்பாலானவர்களை பாதிக்கும் தீவிர ஆர்த்ரைடிஸ் பிரச்னையாகும். இதை தவிர, குழந்தைகளுக்கு ஏற்படும் ஜீவனைல் ஆர்த்ரைடிஸ், தொற்றுக்கிருமிகளால் ஏற்படும் இன்ஃபெக்டிசியல் ஆர்தரைடிஸ், வளர்சிதை மாற்றப் பிரச்னைகளால் ஏற்படும் மெட்டபாலிக் ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்னைகளும் நம் நாட்டில் அதிகமாக உள்ளன.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிலை பொருத்தவரை, மூட்டியினுடைய மேற்பரப்பிலுள்ள குறுத்தெலும்பை ஆர்டிக்குலர் கார்ட்டிலேஜ் என்று சொல்வோம். இது இரண்டு மேற்பரப்பும் நகரும் இடமான ஜாயிண்ட்களில் ஒருவிதமான வழவழப்பான தன்மையுடன் மென்மையாக இருக்கும். அதைத்தான் ஆர்டிக்குலர் கார்ட்டிலேஜ் என்று சொல்வோம். அது ஏதாவது காரணத்தால் பாதிக்கப்படும்போது, ஆர்த்ரைட்டிஸாக மாறுகிறது. இது சிறியவர், பெரியவர் என்று இல்லாமல் அனைத்து வயதினரையுமே பாதிக்கும்.

ஆனால் பெரும்பாலும், வயது முதிர்வினால் ஏற்படும் மூட்டு தேய்மானத்தால் அதிகம் ஏற்படுகிறது. இதைதான் ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் என்று சொல்வோம். இதுதான் பொதுவாக பரவலாக காணப்படும் மூட்டுவலி ஆகும். இது தவிர, இளைஞர்களை தாக்கும் ஆர்த்ரைட்டிஸ் என்பது ரூமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ஆகும். இது பெரும்பாலும், 20 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இதனை கீல்வாதம் என்று சொல்கிறோம். இது பெண்களை ஏன் அதிகம் பாதிக்கிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக இல்லை. அதுபோல், இந்த ரூமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் பொருத்தவரை, முழங்கால் மூட்டு மட்டும் இல்லாமல், உடலில் உள்ள பல மூட்டுகளையும் தாக்கும். உதாரணமாக, கை மூட்டு, இடுப்பு மூட்டு, பாதங்கள் போன்ற எல்லா மூட்டுகளையும் பாதிக்கும்.

அதுபோல், சொரியாசிஸ் போன்ற சரும நோய்களின் பாதிப்பு இருப்பவர்களுக்கு, சொரியாடிக் ஆர்த்ரோபதி என்று சொல்லக் கூடிய சரும நோயால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ்
வரலாம். சிலருக்கு அடிப்பட்டதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு அது சரியாக குணமாகாமல் இருந்தாலோ அல்லது அந்த எலும்பு சரியாக ஒன்று கூடாமல் இருந்தாலோ கூட ஆர்த்ரைட்டிஸ் வரலாம்.

அடுத்தபடியாக, ஆன்கைளாசிங் ஸ்பான்டிலைட்டிஸ் என்று ஒருவகை ஆர்த்ரைட்டிஸ் உள்ளது. இது பெரும்பாலும் இளம் ஆண்களை தாக்கக்கூடியது. இது முதுகெலும்பில் இருக்கும் மூட்டுகளை அதிகம் பாதிக்கும். இதனை சரியாக கவனிக்காமல் விட்டால், நாளடைவில் எலும்புகள் வளைந்து கொடுக்க முடியாமல், மூங்கில் போன்று உறுதியாகிவிடும். இதனால், மூட்டை அசைப்பதே கடினமாக இருக்கும். ஆர்த்ரைட்டிஸில் 200 வகைகள் இருந்தாலும், இவைதான் பெரும்பாலும் பரவலாக காணப்படும் ஆர்த்ரைட்டிஸாகும். ஆர்த்ரைடிஸை பொருத்தவரை, பொதுவாக, தன்தடுப்பாற்றல் கோளாறு மற்றும் வயது முதிர்வு இவை இரண்டுமே முக்கிய காரணமாகும்.

அதுபோன்று, மூட்டில் ஏற்படுகிற எல்லா வலியும் ஆர்த்ரைட்டிஸ் கிடையாது. ஆரம்பகட்டத்தில் மூட்டு சவ்வு வீக்கம் ஏற்படும். அப்போது அது வீக்கமாக மட்டுமே இருக்கும். மூட்டு சவ்வுகளை பாதிக்காது. எந்தவொரு மூட்டுவலியும், இரண்டு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக இருக்கும்போது தான் ஆர்தரைடிஸாக மாறுகிறது.

அறிகுறிகள்

இணைப்புகள், மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு ஆகியவைதான் ஆர்த்ரைட்டிஸின் பொதுவான அறிகுறியாகும். இந்த வலி மற்றும் இறுக்கம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருக்கக்கூடும். சிலருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் வந்து போவதாகவும் இருக்கக்கூடும். நாள்பட்ட ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை கவனிக்காமல் விடப்பட்டால், இணைப்புகளில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு சிலவகை ஆர்த்ரைடிஸ்கள் இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இது ஒருவர் எந்தவகையான ஆர்த்ரைடிஸால் பாதிக்கப்பட்டுள்ளாரோ அதற்கு தகுந்தவாறு அறிகுறிகளும் மாறும்.

சிகிச்சை முறைகள்

பொதுவாக எந்தவொரு நோய்க்குமே வரும்முன் காப்பதே சிறந்ததாகும். அதாவது, ரூமட்டாய்ட் ஆர்த்தரைடிஸ் போன்று சிலருக்கு மரபணு மாற்றத்தால் ஏற்படலாம் அல்லது சிலருக்கு தொற்றுகளால் ஏற்படலாம். இதுபோன்ற காரணத்தால் ஏற்படும், ஆர்த்ரைடிஸை தடுப்பது சற்று கடினம். ஆனால், முதுமையினால் ஏற்படும் மூட்டு அழற்சியை ஓரளவு நாம் தடுக்க முடியும்.

அவை, உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது. அவரவர் உயரத்திற்கு தகுந்தவாறு உடல் எடையை பராமரிக்க வேண்டும். அடுத்தபடியாக தினசரி உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமச்சீரான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல், ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ள எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவையும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள், ஃபிளக்ஸ் விதைகள், ஆளிவிதைகள், வால்நட், முட்டையின் மஞ்சள் கரு, சோயா பீன்ஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

வெள்ளைச் சர்க்கரையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டு்ம். அதுபோன்று புகைபிடித்தல், மதுவை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புகையிலை, சிகரெட் ஆகியவற்றில் உள்ள நச்சு பொருள்கள் மூட்டை அதிகளவில் பாதிக்கக்கூடிய முக்கியக் காரணமாகும். எனவே மேலே சொன்னது போன்று கடைபிடித்தால் ஆர்த்ரைடிஸ் பிரச்னை வரும்முன் தற்காத்துக் கொள்ளலாம்.

சிகிச்சை முறை என்றால், பிசியோதெரபி, போதுமான ஓய்வு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், மூட்டுகளைச் சுற்றிலும் உள்ள தசையை வலுவாக்கும் பயிற்சிகள், வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி மருந்து, மாத்திரைகள், உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் போன்றவை தீர்வுகளைத் தரும். இதைத்தவிர, தற்போது வயதானவர்களுக்கு மூட்டுகளை வலுப்படுத்த, நவீன மருந்துகள் உள்ளது.

இதுவே, தீவிரப் பாதிப்பு என்றால், மூட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்வது, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை போன்று செய்யப்படும். இது தவிர, ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸுக்கு அதற்கென்றே சில மருந்து வகைகள் உள்ளன. அவற்றை அதற்குரிய மருத்துவர்களை அணுகி அவர்களின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

பரிசோதனைகள்

பொதுவாக, ஆர்த்ரைடிஸ் பிரச்னைக்கு எக்ஸ்ரே பரிசோதனை மட்டுமே போதுமானது. ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் பிரச்னைக்கு ரத்தப்பரிசோதனை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

The post ஆர்த்ரைட்டிஸ் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Kesavan ,
× RELATED பிள்ளைகளின் பிடிவாதத்தை பிடிவாதத்தால் சரிசெய்வோம்!