×

சென்னை நதிகள் சீரமைப்பு நிதி மூலம் 21 சிறு கால்வாய்களை சீரமைக்க முடிவு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு நிதி மூலம், ரூ.86.4 கோடி செலவில், 21 சிறு கால்வாய்களை சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழைக்காலங்களில் அதிக வெள்ளநீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய்களை முழுமையாக தூர்வாரி ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான டெண்டர்கள் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்பட்டு, 2024 ஜனவரியில் பணிகள் தொடங்கப்படும். கழிவுநீர் கலப்பதை தடுப்பது, கழிவுநீரை திசை திருப்புவது, தேவையான இடங்களில் பக்கவாட்டு சுவர்கள் கட்டுவது, மக்கள் குப்பை கொட்டுவதை தடுக்க வலைகள் அமைப்பது உள்ளிட்டவை இந்த சீரமைப்பு பணியின் போது மேற்கொள்ளப்படவுள்ளது.

வியாசர்பாடியில் 2.89 கி.மீ நீளமுள்ள கேப்டன் காட்டன் கால்வாய், அம்பத்தூரில் 2.4 கி.மீ நீளமுள்ள நொளம்பூர் கால்வாய். நந்தனம், நுங்கம்பாக்கம், எம்.ஜி.ஆர் கால்வாய், ஜாபர்கான்பேட்டை, ராஜ்பவன் கால்வாய் போன்ற முக்கிய நகர கால்வாய்கள் புனரமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மழைக்காலங்களில் கால்வாய் அடைப்பு காரணமாக அடிக்கடி தண்ணீர் திரும்பும் முக்கிய நகர பகுதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

கூவம் மற்றும் அடையாறில் தண்ணீர் தடையின்றி செல்ல, இந்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கால்வாய்கள் சேதமாவதை தடுக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து விட்டால், வெள்ள மேலாண்மை சிறப்பாக இருக்கும். மேற்கு முதல் கிழக்கு வரை தண்ணீர் செல்வதும், சிறு கால்வாய்களை புனரமைப்பதும், வெள்ளத்தை தடுக்க அவசியம். அதேநேரத்தில், அவ்வப்போது பராமரிப்பு என்பதும் முக்கியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை நதிகள் சீரமைப்பு நிதி மூலம் 21 சிறு கால்வாய்களை சீரமைக்க முடிவு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...