×

ங போல் வளை – யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

காற்றுக்கென்ன வேலி?

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

எந்த ஒரு ஆற்றலும் தன் பாதையில் தடைபட்டாலோ தேங்கி நின்றாலோ இரண்டு விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று, அழுத்தம் ஏற்பட்டு உயர் அழுத்தம் கொண்ட ஆற்றலாக மாறி, வெளிப்பட சரியான தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அல்லது அழுத்தம் மிகுந்து உடைப்பை ஏற்படுத்தி ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படும். நமது அணைக்கட்டுகள் முதல் மின்விசிறியின் சுவிட்ச் வரை இதையே நாம் அனுபவிக்கிறோம். விரல் நுனியால் தொட்டவுடன் மின் காந்த அலைகள் காற்று எனும் ஆற்றலாக மாறி நம்மை குளிர்விக்கிறது.

இது ஏதோ இயற்பியல் விதிகளுக்கு மட்டும்தான் பொருந்துமா? எனில் உயிரியல் விதிகளுக்கும் இதுவே அடிப்படை. அந்த வகையில் ஒவ்வொரு உயிரும் இங்கே ஆற்றலை உற்பத்தி செய்து கொண்டும் வெளிப்படுத்திக்கொண்டும் இருப்பதையே நாம் உயிரியல் இயக்கம் என்கிறோம். மனிதர்களுக்கும் இதுவே பொருந்தும்.

எனினும் மனிதன் உற்பத்தி செய்யும் ஆற்றலும், செலவு செய்யும் ஆற்றலும், இரண்டு வகைகளாகப் பிரிந்து இந்த வாழ்வை கட்டமைக்கிறது. கண்ணனுக்குத் தெரியக்கூடிய உடல் எனும் இந்த பருப்பொருள். அடிப்படையில் நீர், நெருப்பு, காற்று , நிலம் மற்றும் ஆகாயம் எனும் ஆதி இயற்கையில் இருந்து நாம் பெற்றது. நாம் இந்த உடலைப் பெற்ற பின் வளர்ந்து, இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை, கண்ணுக்குப் புலனாகும் மற்றும் புலனாகாத இரண்டு வகை ஆற்றல்களாகவும் இருக்கிறது.

நாம் உண்ட ஒரு கைப்பிடி வேர்க் கடலை ஒரு துளிப் புரதமாக மாறி, தொடையின் தசை பகுதியாகவோ, கன்னத்தின் சதைப் பகுதியாகவோ மாறுவது என்பது கண்ணுக்குப் புலனாகும் ஒன்றும் புலனாகாத ஒன்றும் இணைந்து இந்த ஆற்றலை உருவாக்குகிறது. ஆகவே, வெளியே தெரியும் இந்த உடலை ‘ஸ்தூல சரீரம்’ என்றும் கண்ணுக்குத் தெரியாத இயக்கத்தை ‘சூட்சும சரீரம்’ என்றும் இந்திய மரபு வகை பிரிக்கிறது. இப்படியாக நம் உடலும், மனமும் சேர்ந்தே ஸ்தூலமாகவும், சூட்சுமமாகவும் இயங்குவதால் , ஓர் இயக்கம் முடிந்த பின் உருவாகும் கழிவுப் பொருள் போல உடலிலும் மனதிலும் பல படிகளாக பதிவுகளும், தேவையற்ற சிக்கலான விசயங்களும் தேங்கி விடுகின்றன.

அப்படித் தேங்கியவற்றை, ஆயுர்வேதம் ‘ஆமம்’ என்கிறது, இவை செரிமானம் ஆகாத உணவு, அரைகுறையாகச் செரிமானம் ஆனவற்றின் கழிவு போன்ற விஷத்தன்மையுள்ள, சேகரங்கள். உடலளவில் மட்டுமின்றி, மனம் மற்றும் உணர்ச்சிகளிலும் படுவதாக ஆயுர்வேதமும் யோகமரபும் உத்தேசிக்கிறது. அதிலும், விஷத்தன்மையுள்ள வாயு அதாவது காற்று ஒவ்வொரு ரத்த அணுக்களிலும் படியக்கூடியவை. அப்படிப் படிந்த வாயுவை, ஒவ்வொரு நாளும் உடலை விட்டு வெளியேற்றும் ஏதேனும் ஒரு செயலை செய்வது அவசியம்.

ஏனெனில் நாம் நுகரும் மூச்சில் 28% மட்டுமே உயிர் வளி எனும் ஆக்சிஜன் இருப்பதாக அறிவியல் கருதுகிறது. உள்ளே சென்ற காற்று தனது இயக்கத்தை முடித்துவிட்டு கார்பன் மிகுந்த ரத்த அணுக்களாக மாறுகிறது. அப்படித் தேங்கிய கார்பன் மிக்க ரத்தம் சரியாக சுத்திகரிக்க படாதபொழுது, சோர்வு முதல் நோய் எதிர்ப்பு ஆற்றலின்மை வரை பல்வேறு வியாதிகளுக்கு வழிவகை செய்கிறது. இந்த இடத்தில்தான் யோகமரபு, உடற்பயிற்சி எனும் நிலையைத் தாண்டி ஒரு படி மேலே சென்று, பயிற்சிகளை மூன்றாக வகுத்துவிடுகிறது.

அவை ஆயுர்வேதம் சொல்லக்கூடிய ‘வியாயாமா’ எனும் உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகள் எனும் வகைமைக்குள் வருபவை.முதல் கட்டப் பயிற்சிக்கு, ‘சூட்சும வியாயாமா’ என்று பெயர். இவை நம் உடலின் எட்டு இணைப்புகளுக்குமான பயிற்சிகள் கொண்ட தொகுப்பு. இவற்றை அமர்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும்கூட ஒருவர் செய்துவிட முடியும் என்பதால் அனைத்து வயதினருக்குமான முதன்மைப் பயிற்சி என்றே சொல்லலாம்.

உதாரணமாக, நாம் நெட்டி முறித்தல் அல்லது விரல்களில் சொடுக்கு விடுதல் போன்ற செயல்களின் போது ஏற்படும் சிறிய குமிழி உடையும் சப்தம் என்பது, அந்த இணைப்புகளில் தேங்கியிருக்கும் விஷக்காற்றைக் குறிக்கிறது. எனினும், விரல் இணைப்புகளில் மட்டும் இவ்வகை காற்று தேங்கியிருப்பதில்லை, இப்படி பல இணைப்புகளில் தேங்குவதால் அவற்றை நாம் வெளியேற்ற வேண்டியுள்ளது. யோகத்தில் மேம்பட்ட பயிற்சிகளை ஒருவர் கற்றுக்கொண்டு பயனுற வேண்டுமெனில் முதல்கட்ட பயிற்சியான ‘சூட்சும வியாயாமத்தை’ செய்து பழகியிருக்க வேண்டும்.

அடுத்ததாக, நமது ‘அக்னி’ எனும் நிலையைத் தூண்டவும், சமன் செய்யவும் கூடிய பயிற்சிகளான, ‘சமாக்கினி வியாயாமா ‘எனும் பயிற்சித் திட்டம். இதில் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தவும் தேங்கிய ஆற்றலை உபயோகிக்கவும், வருடக்கணக்காகத் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள், திரவங்கள், விஷவாயு போன்ற பல்வேறு கழிவுகளை வெளியேற்றவும், ஜீரண உறுப்புகளும், சுரப்பிகளும் முழுமையாகத் தங்களுடையப் பணிகளை செய்யவும் உதவக்கூடிய குறிப்பிட்ட வகை பயிற்சிகளை கற்றுத் தேர்ந்து ஆறு மாதங்கள் வரை செய்து பலனடைதல்.

இவ்வகைப் பயிற்சிகளைச் செய்வதற்கு வலுவான கால்களும் கைகளும் தேவைப்படுவதால், மேலே சொன்ன எளிமையான பயிற்சிகளைச் செய்து, ஒருவர் தன்னை தயார் செய்த பின், இவற்றைத் தொடங்கலாம். இந்தப் பயிற்சிகளில் உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்குமான சரியான பயிற்சிகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில், இந்த இரண்டாம் கட்டத்தில், நூற்றுக்கணக்கான பயிற்சிகள் கிடைக்கின்றன. அனைத்தும் பலன் கொடுக்கும் எனச் சொல்லிவிட முடியாது. சில பயிற்சிகள் உடல் சூட்டை அதிகரித்து ஒவ்வாமையை, தலைசுற்றலை, நாட்பட்ட வலியை உண்டாக்கக்கூடியவை.

மூன்றாவதாக சக்தி பந்தாசனம் எனும் பயிற்சித் திட்டம் இவை மேலே சொன்ன இரண்டு வகை பயிற்சி திட்டத்தைவிட, சற்றுக் கூடுதலாகக் கவனத்தையும் உழைப்பையும் நேரத்தையும் கோருபவை. ஏனெனில் சக்தி, அதாவது ஆற்றலை பந்த {கட்டுதல்} அதாவது உற்பத்தி மற்றும் கட்டுப்பாட்டில் வைத்தல் எனப் பல்வேறு வேலைகளைச் செய்யக்கூடிய பயிற்சிகள் அடங்கிய பாடத் திட்டம்.

ஆயுர்வேதம் சொல்லக்கூடிய மூன்று தோஷங்களுக்குமான பயிற்சிகளும், உடல், மனம், உணர்வு நிலைகள் எனப் பல தளங்களில் இதன் தாக்கமும் உள்ள முழுமையான ஒன்று.பொதுவாக மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய ஆசனங்கள், யோக பயிற்சிகள், யோகக் கல்வி நிறுவனங்கள், இந்த மூன்று வகை பாடத்திட்டத்தை படிப்படியாக வழங்குகிறார்களா என்பதே கேள்விக்குறிதான்.

ஏனெனில், அதிக அளவிலான பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதும் தினமும் புதிது புதிதாக ஒன்றைக் கற்றுத்தருவதும் அவர்களுடைய நோக்கமாக இருக்கும்பட்சத்தில், இப்படிப் படிப்படியாகக் கற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றது. ஆகவே, அவர்கள் யோக முழுமை எனும் அனுபவத்தை அடைவதில் தாமதம் ஏற்படுகிறது. சுவாமி சத்யானந்த சரஸ்வதி அவர்கள் மிக கச்சிதமாக இவை மூன்றையும் முறையே, பவன முக்தஸனா, சம அக்னி வியாயாமா, சக்தி பந்தாசனா என அமைத்து ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல மரபார்ந்த ஒரு சில கல்விநிலையங்கள் மட்டுமே இவ்வகைப் பயிற்சியை வழங்குகின்றன. அவற்றைத் தேர்வு செய்வதில் நாம் கவனமாக இருத்தல் அவசியம்.

யோக முத்ராசனம்

இந்தப் பகுதியில் நாம் ‘யோக முத்ராசனம்’ எனும் முக்கியமான பயிற்சியைப் பற்றி பார்க்கலாம். இது வயிற்றுப் பகுதியில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, வயிறு, சிறுநீரகம் என அனைத்து உடலுறுப்புகளையும் சரியாக இயங்கச்செய்வதுடன், முதுகுத்தண்டின் இறுக்கத்தை போக்கி முதுகு, கழுத்து போன்ற இடங்களின் வழிகளை நீக்குகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் உடல் உபாதைகளை நீக்குவதில் முக்கியமான பயிற்சி இது.

The post ங போல் வளை – யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kaveli ,Selandararajan.ji ,
× RELATED உங்க பாப்பா பள்ளி செல்ல மறுக்கிறதா? காரணம் இதோ…