×

ஆன்மிகம் பிட்ஸ்: எப்போது பூஜை செய்ய வேண்டும்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கடன் தீரும்

இறைவனின் கருணை சக்தியே அம்பிகை வடிவெடுத்துள்ளது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள். அதனால், அருளை வழங்கும் பரமாத்மாவே அம்பிகை வடிவில் பொருளையும் வழங்குகின்றது. நவராத்திரியில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது நாளில் பராசக்தியை மகாலட்சுமியாக வழிபாடு செய்பவர்களின் கடன் தொல்ைல தீரும். பொருளாதாரம் செழிக்கும்.

தோத்திரங்கள்

வெற்றிலை, பாக்கு கொடுப்பது, சீரியல் பல்புகள் கொலுவின் மீது அலங்கரிப்பது, புத்தாடைகள் அணிவது மட்டுமே நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள் என்று எண்ணக்கூடாது. இந்த ஒன்பது நாட்களிலும் தேவி சம்பந்தமான துதிகளை அன்றாடம் பாராயணம் செய்ய வேண்டியது அவசியம். செளந்தர்யலஹரி, ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமம், அபிராமி அந்தாதி போன்ற துதிகளை இயன்றளவு பாராயணம் செய்வோருக்கு முழுமையாகத் திருவருள் கிடைக்கும்.

அஷ்ட ஐஸ்வர்யங்கள்

நவராத்திரியில் முதல் மூன்று நாள் துர்க்கை, அடுத்த மூன்று நாள் லட்சுமி, கடைசி மூன்று நாள் சரஸ்வதியை வழிபாடு செய்ய வேண்டும். இதில் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் நமக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். செல்வங்களை எட்டாகப் பிரிப்பார்கள். மணமக்களை வாழ்த்தும் போது அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துவார்கள். தலைமைப் பதவி, நல்ல குழந்தைகள், எந்தப் பலனையும் எதிர்பாராமல் உதவும் உறவினர்கள், நல்ல வழியில் கிடைக்கும் பணம், அழகான ஆடை மற்றும் ஆபரணங்கள், தானியங்கள், வாகனங்கள், நினைத்ததைக் குறைவில்லாமல் தானே செய்து முடிக்கும் வேலை ஆட்கள் இவை அனைத்தும் யாருக்குக் கிடைக்கிறதோ அவரே அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றவர் ஆவார்.

எப்படி விரதம் இருப்பது?

நவராத்திரிக்கு வேண்டிய பூஜைக்குத் தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்க வேண்டும். அடுத்து பிரதமையில் ஆரம்பித்து முதல் எட்டு நாட்கள் பகலில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் எளிய உணவுகளை ஏற்கலாம். இந்துக்கள் விரதத்தில், முழுமையாக பட்டினி இருக்க வேண்டும் என்பதை நம்முடைய பெரியவர்கள் நிச்சயமாகச் சொல்லவில்லை. இருந்தால் நல்லது. முடியாவிட்டால், சில எளிய உணவுகளை உட்கொண்டு விரதத்தைத் தொடரலாம்.

எப்போது பூஜை செய்ய வேண்டும்?

விரதம் இருப்பவர்கள் பொதுவாக பகலில் விரதம் இருந்து, இரவு அம்பிகைக்கு பூஜை நிவேதனம் செய்து அந்தப் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். ஒன்பதாம் நாள் நவமி அன்று முழுமையாக உபவாசம் இருப்பது நல்லது. அது கிட்டத்தட்ட ஏகாதசி விரதம் போல. ஏகாதசிக்கு எப்படி துவாதசி பாரணை முக்கியமோ அதைப் போல மகாநவமியில் விரதமிருந்து, அடுத்த நாள் விஜயதசமியில் காலை 9:00 மணிக்குள் பாரணையை முடிக்க வேண்டும். தினசரி இரவு 7 மணி முதல் அதிகபட்சம் 9 மணி வரை நவராத்திரி பூஜையை நிறைவேற்றுவது சாலச்சிறந்தது. தினமும் இரவில் கொலு பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்தல் அவசியம்.

வீரவ நங்கை

வீரவ நங்கை அம்மனுக்கு `தேசாசாரியாள் வீரவ நங்கை’ என்பதே முழுநாமம் ஆகும். இத்திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் வடக்கு பகுதியில் தேச ஆச்சாரியாள் வீரவ நங்கை அம்மன் சந்நதியும், கோயில் கிழக்கு பகுதியில் கன்னிமூலையில் விநாயகரும், பூதத்தாரும், தெற்கு பகுதியில் வைரவரும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் இரண்டு காலப் பூஜைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் கொடைவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீதர நங்கை

ஸ்ரீதர நங்கையம்மன் கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு ஊரில் அமைந்துள்ளது. தர நங்கையம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தெரிசனங்கோப்பிலிருந்து ராமர் தனது வில்லில் அம்புகளை கோர்த்து தாடகை என்னும் அரக்கி மீது ஏவி அந்த அரக்கியைக் கொன்றார். பெண்ணான அரக்கியைக் கொன்ற பாவம் தீர சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். தவத்தின் முடிவில் ராமபிரானுக்கு, சிவபிரான் தரிசனம் கொடுத்த இடமும் இதுவே. ராமர் சிவபெருமானுக்கு பூஜை செய்ய இடையூறு ஏற்பட்டதால், ஸ்ரீதர நங்கையம்மனை வழிபட்டார். அதன் பின்னரே சிவபூஜை செவ்வனே நடந்தது.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: எப்போது பூஜை செய்ய வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…