×

பஸ்சில் வந்த பயணிகளிடம் நகை, பணம் திருட்டு 3 பெண்களுக்கு கடுங்காவல் சிறை

*கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு

கும்பகோணம் : கும்பகோணத்தில் பேருந்து பயணிகளிடம் நகை பறிப்பு, பிக் பாக்கெட் உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பெண்களுக்கு கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி சுகன்யா (30). இவர் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம்தேதி தனது ஆறு பவுன் செயினை பாலிஷ் செய்வதற்காக மணிபர்சில் வைத்து எடுத்துக்கொண்டு கும்பகோணத்திற்கு வந்துள்ளார். பின்னர் அவர் குத்தாலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரது கை பையில் வைத்திருந்த செயின் இருந்த மணி பர்சை திருடி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.இதேபோல் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம்தேதி நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மனைவி கீதா (53) என்பவர் கும்பகோணத்திற்கு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் அவர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு தனது கை பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கீதா கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கீதாவிடம் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள குப்பம் ஐரன் காலேஜ் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி மீனாட்சி (39), லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மனைவி ரேகா (34) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் மனைவி கோமதி (28) ஆகியோர் கீதாவிடம் பணத்தை திருடி சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும் மீனாட்சி மற்றும் கோமதி இருவரும் சேர்ந்து சுகன்யாவிடம் இருந்து 6 சவரன் தங்க சங்கிலியை திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மீனாட்சி, ரேகா, கோமதி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.இந்த வழக்குகள் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி இளவரசி சுகன்யாவிடம் செயின் திருடிய வழக்கில் கோமதி மற்றும் மீனாட்சி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதேபோல் கீதாவிடம் பணத்தை திருடிய வழக்கில் மீனாட்சி, ரேகா, கோமதி ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

The post பஸ்சில் வந்த பயணிகளிடம் நகை, பணம் திருட்டு 3 பெண்களுக்கு கடுங்காவல் சிறை appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Court ,Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...