×

கைமேல் வெற்றியை அருளும் அஷ்டபுஜ துர்க்கை

மகிஷன் எங்கோ தொலைதூரத்தில் தேவர்களின் பிளிறல் கேட்டு முகம் சிவந்தான். அவன் திரும்புவதற்குள் சிம்மத்தின் கர்ஜனை அவன் காதை செவிடாக்கியது. மகாலக்ஷ்மி மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங்களை வீசினான். அதை புல்லாக கிள்ளி எறிந்தாள். அசுரக் கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். அன்னை அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள்.

தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது! இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே `மகிஷாசுரமர்த்தினி’ எனப்படுபவள். `மர்த்தனம்’ என்றாலே `மாவுபோல் அரைப்பது’ என்று பொருள். மகிஷனின் இறுகிய கல்போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண் மாவாய் இழைத்ததாலேயே `மகிஷாசுரமர்த்தினி’ என அழைக்கப்படுகிறாள்.

பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை `தேவி தபோவனம்’ என அழைத்தனர். ராஜராஜசோழனின் படைத் தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரின் சொந்த ஊர் இதுவேயாகும். அம்மன்குடி கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாகக்கூட வரலாறு உண்டு.

அமண்குடி என்று சமணர்கள் வாழ்ந்த இவ்வூரை இப்போது `அம்மன்குடி’ என்று அழைக்கின்றனர். கோயில் சிறியதுமல்லாது பெரியதுமல்லாது நடுவாந்திரமாக இருக்கும். ஆனால், கீர்த்தியிலும், புகழிலும் புராணம் சொல்வதைப் பார்த்தால் திகைப்பும், பிரமிப்பும் ஒன்றையொன்று விஞ்சும். துர்க்கைக்கு ஈசன் சந்நதிக்கும், அம்பாள் சந்நதிக்கும் இணையாக தனிக் கருவறையில் துர்க்கா தேவி சிம்ம வாகனத்தில் எழில் கொஞ்சும் திருமுகத்தோடும், அருள் பூக்கும் கண்களோடு அருள்பாலிக்கிறாள்.

பிரம்மராயர் கங்கை வரை போர்புரிந்து திரும்பும்போது மிக அழகான விசித்திரமான கல்லாலான விநாயகர் சிலையைக் கொண்டு வந்தார். பகல் பொழுதில் சூரிய கிரணங்கள் பட, சிலை வெண்மையாக ஒளிரும். அந்தி சாயும்போது சிலை இருளாக கறுக்கும். கை வைத்தாலே வாழைப் பழம் போன்று வழுக்கும் கல் அது. இப்போதும் புதியதாக உள்ளதைப் பார்க்க ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகிறது. கோயிலின் முகப்பு வாயிலில் உள்ள விநாயகப் பெருமானை தரிசித்து உள்ளே நகர இடது புறத்தில் துர்க்கையின் சந்நதி.

பிரம்மராயர் காலத்திய துர்க்கையின் சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடம் முன்பு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். துர்க்கா சிம்ம வாகனத்தின் மீதமர்ந்து எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகை பார்க்க நம் அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும்.

இத்தேவியின் பாதம் பணிவோருக்கு கைமேல் கனியாக வெற்றியை ஈட்டித் தருவாள் இந்த அஷ்டபுஜ துர்க்கை. வாழ்வின் வெம்மை தாங்காது பயம் என்று கைகூப்பி நின்றோருக்கு அபயமளித்து அருட் கடலில் ஆழ்த்துவாள் இந்த அம்மன்குடி நாயகி. தேவியின் சந்நதிக்கு அருகேயே பார்வதி தேவியின் சந்நதியும், கைலாச நாத ரின் மூலக் கருவறையும் உள்ளன. துர்க்காவே, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அம்மனின் வாயிலில் மிக அபூர்வமான ஒரு சரஸ்வதியின் சிலை உள்ளது. கண்கள் மூடி, கைகளில் ஜபமாலையோடு வீற்றிருக்கும் கோலம் காணுதற்கு அரியதாகும். நவராத்திரியில் பிரதம நாயகியான லக்ஷ்மி துர்க்காவோடு தானும் தவத்தில் ஆழ்கிறாளோ என்று தோன்றுகிறது. நவராத்திரியில் கடைசி வதமான சும்ப – நிசும்ப வதத்திற்கு தயாராவதுபோலகூட உணர முடிகிறது. அருகேயே விநாயகர் சிலை செதுக்கப்பட்ட விசித்திரமான கல்லாலான சூரியனின் அற்புதச் சிலையும் உள்ளது.

நவ கிரகங்களுக்கு அதிபதியான துர்க்கை இத்தலத்தில் உறைவதால் இக்கோயிலுக்குள் நவகிரகங்கள் இல்லை. ஏராளமான சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலின் கோஷ்டத்து மேல் பகுதியில் ராஜராஜசோழன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது.

இத்தலம் கும்பகோணத்திலிருந்து பதினான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – உப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோயிலை அடையலாம்.

The post கைமேல் வெற்றியை அருளும் அஷ்டபுஜ துர்க்கை appeared first on Dinakaran.

Tags : Ashtabhuja Durga ,Makishan ,
× RELATED அற்புதங்கள் ஆயிரம்: தீராத நோய்களையும்...