*விலை உயரும் வாய்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் முதல்போகம் நெல் உற்பத்தி அமோகமாக நடைபெற்றுள்ளது. முதல் கட்டமாக மார்க்கையன் கோட்டை, குச்சனூர் பகுதிகளில் தீவிர அறுவடை நடைபெற்று வருகிறது. விலை ரூ.1400க்கு மேல் உயரும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15,000 ஏக்கரளவில் முல்லை பெரியாற்று பாசனத்தில் வருடத்தில் இருபோகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்பட்ட பாசன நீர் தொடர்ந்து முதல் போகம் நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்டதால் கண்மாய், குளங்களில் நிரம்பி ஜூன் இறுதியில் நடவு துவங்கி இரண்டு மாதத்தில் முடிக்கப்பட்டது.
120 நாட்களில் பலனுக்கு வரும் நெற்பயிர்கள் முன்னதாக பயிரிட்டுள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக அறுவடை துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சின்னமனூர் பகுதியில் 4000 ஏக்கர் அளவிலும் நெல் நடவு செய்து நெற் கதிர்களாக பசுமை கடந்து செந்நிறமாக மாறி அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கிறது.தீவிர நெல் வளர்ச்சியின் போது மழை சரிவர இல்லாமல் பாசன பற்றாக்குறை வரும் என்ற அச்சம் நிலவியது.தொடர் மழை பெய்யாத காரணத்தால் சில நோய் தொற்றுகளும் உருவாகி நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்தது.
வேளாண்மை துறையினர் வயல் வெளி பள்ளிகள் நடத்தியும், நேரடி கள ஆய்வு செய்து சில வழி காட்டுதல்கள் மருந்துகளை தெளித்து காப்பாற்றினர்.கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே மழை தூரல்கள் பெ ய்து கைகொடுத்ததால் நெற்பயர்களுக்கு ஊட்டம் கிடைத்ததால் புத்துயிர் பெற்று நோய்களிடமிருந்து தப்பித்து நல்ல உற்பத்தி கிடைத்துள்ளது. சின்னமனூர் பகுதியில் முதல் போகத்தில் முதல் கட்டமாக சாகுபடி செய்திருந்த மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதிகளில் 509 ரகம் கொண்ட நெல் அறுவடை துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே வயல்வெளிகளில் இறக்கி விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். அங்கேயே களத்திலும், சாலைகளிலும் குவித்து 61 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டி நேரடியா வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது 61 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1300க்கு விலை கொடுத்து கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, சின்னமனூர் பகுதியில் குச்சனூர், மார்க்கையன்கோட்டை, துரைசாமிபுரம் போன்ற பகுதிகளில் 509 ரக நெல் அறுவடை துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெய்வாதினமாக இடையில் ஏற்பட்ட பாசன பற்றாக்குறையை மேல் மழை பெய்து காப்பாற்றி உள்ளதால் நல்ல உற்பத்தி கண்டு கைப்பிடிக்காத வகையில் தப்பித்துள்ளோம். மேலும் இன்னும் தொடர்ந்து ரூ.1400க்கு மேல் விலை உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
காரணம் வெளி மாவட்டங்களில் சரிவர மழை இல்லாத காரணத்தால் பாசன பற்றாக்குறையால் நெல் உற்பத்தி கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பு அடைத்துள்ளனர். ஒரு ஏக்கரில் 40 முதல் 48 மூட்டைகள் வரை உற்பத்தியாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மழையால் தப்பித்து விட்டோம் என்றனர்.
The post மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதிகளில் முதல்போகம் நெல் அறுவடை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.