×

இடிந்து விழும் நிலையில் குடியிருப்பு வீடுகள்-அச்சத்தில் சர்க்கஸ் தொழிலாளர்கள்

மானாமதுரை : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிப்காட் கங்கையம்மன் நகர் குடியிருப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக்காலம் என்பதால் வீடு மராமத்து செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மானாமதுரை, ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சியில் கங்கையம்மன் நகரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர்.

அப்போது மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்ட வந்தபோது பிரதமர் இந்திரா காந்தி,முதல்வர் எம்ஜிஆரிடம் சர்க்கஸ் தொழிலாளர் குடும்பத்தினர் குடியிருக்க வீடுகட்டி தருமாறு மனு கொடுத்தனர். அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்குமாறு பிரதமர் இந்திராகாந்தி, எம்ஜிஆரிடம் தெரிவித்தார். 1984ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 36 ெதாகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது.

39 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை இந்த குடியிருப்புகள் பழுது பார்க்கப்படாமல் அப்படியே உள்ளது. அன்றைய காலத்தில் தொகுப்பு வீடுகள் ஓடுகளால் அமைக்கப்பட்டதால் ஓடு வைக்கப்பட்டிருக்கும் பனைஞ்சட்டம், கைமரம் ஆகியரை உளுத்துபோய் எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. கூரை ஓடுகள் விழுந்துவிடாமல் இருக்க சவுக்கு கம்புகளால் முட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெளிப்புற சுவர் அரித்து போய் உள்ளதால் கனமழையின் போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே வீட்டை பராமரிக்க நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட வீடுகள் என்பதால் ஓடுகள் உடைந்தும் பனைமர சட்டங்கள் உளுத்துபோய் உள்ளது. சர்க்்கஸ் தொழிலாளர்களான எங்களால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய முடியாமல் சிலர் துணியால் டெண்ட் அமைத்து வெளியில் தங்கியுள்ளோம்.

சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு ரூ. ஐம்பதாயிரமும், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளுக்கு அரசு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ரூ.25 ஆயிரமும் நிதி ஒதுக்குகிறது. அதேபோல எங்களது வீடுகளையும் மராமத்து செய்து தர மாவட்ட கலெக்டர் நிதி ஒதுக்கி பணிகளை துவங்க உத்தரவிடவேண்டும் என்றனர்.

The post இடிந்து விழும் நிலையில் குடியிருப்பு வீடுகள்-அச்சத்தில் சர்க்கஸ் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Chipgat Gangaiyamman Nagar ,Manamadurai Panchayat Union ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...