×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டப்பணி 30 கிராம மீனவர்கள் கடும் அவதி

*பாலப்பணி முடிந்தும் இணைப்பு சாலை `கட்’

*13 ஆண்டுகளாக தொடரும் அவலம்

சீர்காழி : சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கீழமூவர்கரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.13 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டியும், இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாததால் 38க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் முதல் பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவர்கரை, பெருந்தோட்டம், பூம்புகார், வானகிரி, சின்னங்குடி, தரங்கம்பாடி, உள்ளிட்ட 38க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு இடையே தொடர்ச்சியாக பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இதனால் மீனவர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நீண்ட தூரம் பயணித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை இருந்து வந்தது.எனவே கிராம மக்கள் நலன் கருதி மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் திருமுல்லைவாசல் கீழ மூவர்கரை இடையே உப்பனாற்றில் பாலம் கட்ட வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு இதனைத் தொடர்ந்து கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2007 ஆண்டு திருமுல்லைவாசல் கீழமூவர்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் உப்பனாற்றில் புதிய பாலம் கட்ட சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.27.50 கோடி ஒதுக்கப்பட்டு சுமார் 1.கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டும் பணி தொடங்கி 2010 முடிவடைந்தது.

ஆனால் திமுக ஆட்சியில் பாலப்பணி விரைவாக செய்து முடித்தும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, இப்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிக்கான வேலையை துரிதப்படுத்த வில்லை.இதனால் பாலம் கட்டியும் பொதுமக்கள், மீனவர்கள் விவசாயிகள் பயன்படுத்த முடியாமல் கடந்த 13 ஆண்டுகளாக பாலம் மட்டும் தனியாக அந்தரத்தில் தொங்கியவாறு காட்சி அளிக்கிறது.

இணைப்பு சாலை அமைக்கப்படாததால் பழையார், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்களை விற்பனை செய்ய சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். புதிய பாலம் கட்டி 13 ஆண்டுகள் கடந்து விட்டதால் பாலம் பராமரிப்பு இல்லாமல் சேதமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கீழ மூவர்கரை பகுதியில் இணைப்பு சாலைகள் பணிகள் தொடங்கப்பட்டு முழுமை பெறாமல் இருந்து வருகிறது. திருமுல்லைவாசல் கீழ மூவக்கரை இணைப்பு சாலை அமைக்கப்பட்டால் கடற்கரையை ஒட்டி உள்ள விவசாயிகள், இறால் வளர்ப்போர் அதிகளவில் பயன்பெறுவார்கள்.

இதேபோல் மாணவ-மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதில் சென்று வர முடியும். மேலும் கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து மீன் வாங்க வரும் கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் விரைவாக கடற்கரை சாலையை பயன்படுத்தி செல்ல முடியும். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் கடந்த 13 ஆண்டுகளாக இணைப்பு சாலை அமைக்கப்படாமல் இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்காமல் ரூ.27 கோடி 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டுக்கு வராமல் சிதலமடையும் அபாயம் இருந்து வருகிறது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் 38க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து மீன் வாங்க வரும் சரக்கு வாகனங்கள் பயனடையும், மேலும் இந்த பாலத்தின் இணைப்பு சாலை முடிவடைந்தால், கடற்கரை சாலையை பயன்படுத்தி நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி எளிதில் சென்று வர முடியும்.

திருமுல்லைவாசல் பகுதியில் இணைப்பு சாலைகள் அமைய உள்ள இடங்களில் இடத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13 ஆண்டுகளுக்கு மேலாக இணைப்பு சாலை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடித்து பாலத்தில் போக்குவரத்து பணியை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள், பொதுமக்கள் விவசாயிகள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடிவு பிறக்குமா?

திருமுல்லைவாசல் கீழமூவர்கரை பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இணைப்பு சாலை இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. இணைப்பு சாலை அமைக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தால் அதிகாரிகள் வந்து பார்த்து செல்கின்றனர், அதோடு பணிகள் தொடங்கு வதில்லை. இதேபோன்று கடந்த 13 ஆண்டுகளாக பாலம் பணி முழுமை பெறாமல் தொடர் கதையாக இருந்து வருவது. திருமுல்லைவாசல் கீழமூவர்கரை பாலத்திற்கு விடிவு காலம் பிறப்பது எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டப்பணி 30 கிராம மீனவர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sirkazhi ,Tirumullaivasal ,Geezamoovarkarai ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்