×

சம்பா விவசாயிகள் கவலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரியின் நீர் மட்டம் சரிந்து வருவதால் சம்பா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. சுமார் 16 கிலோமீட்டர் நீளமும் 5.6 கிலோமீட்டர் அகலத்துடன் உள்ள வீராணம் ஏரி தண்ணீர் வரத்து காலங்களில் கிட்டத்தட்ட கடல்போல காட்சியளிக்கும். விவசாய பயன்பாட்டிற்காக சோழர்கள் காலத்தில் ஏற்பட்ட ஏரியின் நீர்மட்டம் 47.50 அடிகள். கொள்ளளவு 1465 மில்லியன் கன அடிகளாகும். இதன் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

மறைமுகமாக ஏறக்குறைய 1 லட்சம் ஏக்கர்களுக்கு தண்ணீர் அளிக்கிறது. இதுதவிர வெற்றிலை, கரும்பு, மீன்பிடி தொழில், சென்னை குடிநீர் என பல்வேறு தொழில்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது.வீராணம் ஏரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறின் மூலமாக தண்ணீர் வரும். நடப்பு வருடம் ஏரிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவாகவே இருந்த காரணத்தால் ஏரி இந்த வருடம் முழுகொள்ளளவை எட்டவில்லை. இருப்பினும் விவசாயிகள் பொதுப்பணித்துறையிடம் விதைப்புக்கு போதுமான தண்ணீரை கேட்டு பெற்று விதைப்பு மற்றும் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ஏரியின் நீர்மட்டம் 41.60 அடிகளே இருப்பதால் தொண்டைப் பயிர் எனக் கூறப்படும் நெல் பயிர் பூ வைக்கும் தருவாயில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.தற்போது தண்ணீர் குறைவாக செல்வதால் பூச்சிக்கொல்லி மருந்து ஏக்கருக்கு இன்னொரு மில்லி தெளித்து வந்த நிலையில் தற்போது 1600 மில்லி லிட்டர் தெளிக்க வேண்டிய நிலை உள்ளது என வருத்தம் தெரிவித்த விவசாயிகள், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் பேசி போதுமான தண்ணீரை பெற்று தந்து ஏரியை
நிரப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சம்பா விவசாயிகள் கவலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Samba ,Viranam Lake ,Kattumannarko ,Veeranam lake ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை