×

நீதித்துறையில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை

சென்னை: நீதித்துறையில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக 635 தட்டச்சர்கள், 186 இளநிலை ஊழியர்கள், 57 சுருக்கு எழுத்தர்கள், 29 கணினி இயக்குநர்கள் என மொத்தம் 907 பேர் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் செய்தித்தாள் விளம்பரத்தின் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, கல்வி மற்றும் தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியாணை வழங்கப்பட்டது. இவர்களில் பலர் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆவார்கள். நிரந்தர பணியாளர்கள் பெறும் ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த விதமான சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

கடந்த காலத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், பல ஆண்டுகள் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை, நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் சிறப்பு நேர்காணல் நடத்தி, கால முறை ஊதியத்தில் நிரந்தரப் பணியாளர்களாக நியமித்தார்கள். அதேபோன்று, தங்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரி தற்காலிக ஊழியர்கள் கடந்த அஇஅதிமுக அரசிடம் கோரிக்கை வைத்தபோது, அதை ஏற்க மறுத்த நிலையில் ஊழியர்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

சென்னை உயர்நீதிமன்றம், தற்காலிக பணியாளர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சிறப்புப் போட்டித் தேர்வு நடத்தி, தேர்வு செய்து நிரந்தரப் பணியாளர்களாக பணி நியமனம் செய்ய தமிழ் நாடு அரசுக்கு பரிந்துரை செய்தது. கடித எண் 20426 நீதிமன்றங்கள் V/2015 -1 நாள் 28.5.2015 தேதியிட்ட கடிதத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற பரிந்துரையை அப்போதைய அஇஅதிமுக அரசு ஏற்க மறுத்து விட்டது.

ஆனால் இதேபோன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு துறைகளில் பணி புரிபவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளார்கள். குறிப்பாக, பல்வேறு நகராட்சிகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்கள் ஆகியோர்களை அரசாணை எண் 147 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 05.10.2013 அரசாணை மூலம் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே ஏற்கனவே உள்ள முன்மாதிரிகளைப் பின்பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 907 பணியாளர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசிலீத்து, மீது இரக்கம் காட்டி பணி நிரந்தரம் செய்து, அவர்களது குடும்பங்களில் விளக்கேற்றி வைத்திட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நீதித்துறையில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vico ,Chennai ,Madhyamik ,General Secretary ,Vaiko ,Dinakaran ,
× RELATED மதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்க துரை வைகோ வேண்டுகோள்