×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கான கடன் அட்டை: ஒன்றிய அமைச்சர் வழங்கினார்

சென்னை: ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா ‘சாகர் பரிக்ரமா’ என்ற திட்டத்தின் மூலம், கடல் வழியே பயணம் செய்து மீனவ மக்களை, அவர்களின் கிராமத்திற்கே சென்று குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் 9ம் கட்ட கடல் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை மீனவ கிராமத்தில் நேற்று தொடங்கினார். தொடர்ந்து, மாமல்லபுரம் மீனவ கிராமங்களில், மீனவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில், மீனவர்களுக்கு கடன் அட்டைகளை வழங்கினார்.

பின்னர், சென்னை துறைமுகத்திற்கு சென்று, தமிழக அரசு அதிகாரிகளிடையே ஆய்வு கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து திருவொற்றியூரில் ரூ.200 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சூறை மீன்பிடி துறைமுக பணிகளை பார்வையிட்டு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர், திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடல் வழியாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவர்களுக்கு கடன் உதவி வழங்கும் விதமாக கடன் அட்டைகளை ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வழங்கி, பேசியதாவது:  திருவொற்றியூரில் சூறை மீன்பிடி துறைமுக பணிகள் டிசம்பரில் நிறைவடையும். விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுவதை போன்று ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் மீனவ மக்களுக்கு கிஷான் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி தருபவர்களுக்கு 3 சதவீத வட்டி திருப்பி அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார் சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசியதாவது:

ஒன்றிய மீன்வள மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ.49 கோடி மற்றும் சாகர் மாலா மூலம் ரூ.49 கோடி என, மொத்தம் ரூ.98 கோடி ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வந்துள்ளது. அத்துடன் காசிமேடு மீன்பிடி துறைமுக பொறுப்பு கழகம் ரூ.29 கோடி வழங்கியது. மொத்தம் ரூ.127 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகத்தில் 25 திட்டங்கள் நவம்பர் மாதம் துவங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, துறைமுகம் பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால், எம்எல்ஏக்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர் மற்றும் மீனவ சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

The post காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கான கடன் அட்டை: ஒன்றிய அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kasimedu ,Fishing ,Port ,Union Minister ,Chennai ,Union Fisheries ,Minister ,Parshotham Rupala ,Parikrama ,Kasimedu Fishery Port ,Union ,Dinakaran ,
× RELATED நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!