×

பழைய வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக ₹3 லட்சம் பறித்து சென்ற கும்பல் போலீஸ் சீருடையில் வந்து துணிகரம் பெங்களூரை சேர்ந்தவர்களிடம்

வேலூர், அக்.10: பெங்களூரை சேர்ந்த 2 பேரிடம் பழைய வீட்டு உபயோக பொருட்கள் வாங்கித்தருவதாக கூறி ₹3 லட்சம் பறித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு கங்கா நகர் சிபிஐ அலுவலகம் அருகில் வசிப்பவர் கே.எம்.பர்வேஷ்அகமது(53). இவர் பழைய வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். வழக்கமாக சென்னையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம்தான் பொருட்களை வாங்கி பெங்களூரில் விற்பனை செய்வாராம். கடந்த மாதம் வழக்கம்போல இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது தன்னிடம் தற்போது பொருட்கள் இருப்பு இல்லை என்று கூறி, சங்கர் என்பவரை தொடர்பு கொள்ளும்படி அவரது மொபைல் எண்ணையும் கொடுத்துள்ளார். இந்த நம்பரை தொடர்பு கொண்ட பர்வேஷ்அகமதுவை கடந்த சனிக்கிழமை காட்பாடியில் வந்து சந்திக்கும்படி சங்கர் கூறியுள்ளார். இதையடுத்து தனக்கு சொந்தமான காரில் நண்பர் மொஹாஜித்கான் உட்பட 3 பேருடன் பெங்களூருவில் இருந்து பர்வேஷ்அகமது வேலூர் வந்துள்ளார். இங்கு வந்து தொடர்பு கொண்டபோது காட்பாடி பிரம்மபுரம் தனியார் கல்லூரி வாசலில் வந்து சந்திக்கும்படி தெரிவித்துள்ளார்.

இதை நம்பி தனது நண்பர்கள் 2 பேரை காருடன் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டு மொஹாஜித்கானுடன் ஒரு ஆட்டோவில் சங்கர் குறிப்பிட்ட இடத்தில் அவரை பர்வேஷ்அகமது சந்தித்தார். அப்போது சங்கர், திருவலத்தில் பொருட்கள் உள்ள குடோன் இருப்பதாகவும், அங்கு செல்லலாம் என்று கூறி பர்வேஷ்அகமது, அவரது நண்பர் மொஹாஜித்கான் ஆகியோரை தனது காரில் ஏற்றிக் கொண்டு திருவலம் நோக்கி சென்றுள்ளார். காரில் வைத்து பர்வேஷ்அகமது ₹3 லட்சம் பணத்தையும், ₹2 லட்சத்துக்கான செக்கையும் கொடுத்துள்ளார்.

திருவலம் செல்லும் வழியில் அம்முண்டி அருகே சங்கரின் காரை போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் உட்பட 4 பேர் வழிமறித்து, சங்கரை தவிர பர்வேஷ்அகமது, மொஹாஜித்கான்ஆகியோரை இறங்கும்படி கூறிய அவர்கள் விசாரணை நடத்துவதுபோல சங்கரிடம் நடந்து கொண்டனர். இதனால் பதற்றமடைந்த நிலையில் பர்வேஷ்முகமது, மொஹாஜித்கான் நின்றிருக்கும்போதே கண்ணிமைக்கும் நேரத்தில் 4 பேரும் காரில் ஏறி சங்கருடன் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பர்வேஷ்அகமது கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குபதிவு செய்து, நூதன முறையில் ₹3 லட்சத்தை பறித்து சென்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பழைய வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக ₹3 லட்சம் பறித்து சென்ற கும்பல் போலீஸ் சீருடையில் வந்து துணிகரம் பெங்களூரை சேர்ந்தவர்களிடம் appeared first on Dinakaran.

Tags : Vadhakaram Bangalore ,Vellore ,Bangalore ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...