×

20 ஆண்டு கோமாவில் உள்ள பிஎஸ்எப் வீரருடன் ஆம்புலன்சில் வந்த பெற்றோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஆதார் அட்டைக்கு அலைக்கழிப்பதாக புகார் மனு

வேலூர், அக்.10: ஆதார் அட்டை வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி, விபத்தில் பாதித்து 20 ஆண்டுகள் கோமாவில் உள்ள பிஎஸ்எப் வீரருடன் பெற்றோர் மனு அளிக்க ஆம்புலன்சில் வந்ததால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ மாலதி தலைமையில் நடந்தது. அப்போது ஆம்புலன்சில் கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளி அழைத்துவரப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆம்புலன்சில் வந்தவர்கள் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த சுமதி மற்றும் அவரது கணவர் ஓய்வு பெற்ற எஸ்ஐ ரகுபதி என்பதும், கோமா நிலையில் இருந்தவர் அவர்களது மூத்த மகன் மகேஷ்பாபு(42) என்பதும் தெரியவந்தது.

மகேஷ்பாபு எல்லை பாதுகாப்பு படை வீரராக(பிஎஸ்எப்) பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மகேஷ்பாபு கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து கடந்த 20 வருடங்களாக கோமா நிலையில் உள்ள மகேஷ்பாபுவுக்கு ஓய்வூதியம் அவரது தாயார் சுமதி பெயரரோடு இணைந்து இணைப்பு கணக்கில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகேஷ்பாபுவின் காஷ்மீர் அலுவலகத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக மகேஷ்பாபுவுக்கான ஆதார் அட்டையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர். ஆனால் பலமுறை முயற்சித்தும் தற்போது வரை கோமா நிலையில் உள்ள மகேஷ்பாபுவுக்கு அரசு சார்பில் ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.

தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக கூறி ரகுபதி- சுமதி தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க கோமா நிலையில் உள்ள தனது மகன் மகேஷ்பாபுவை ஆம்புலன்ஸ் மூலம் மனு அளிக்க அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ரகுபதி கூறுகையில், ‘எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு எனது மகனே வேண்டாம். இங்கேயே விட்டுவிட்டு போகிறேன். என்னால் முடியவில்லை. இதுவரை சொத்தை எல்லாம் விற்று ₹72 லட்சம் வரை எனது மகனுக்காக செலவு செய்துள்ளேன். அவனது பென்ஷனில் தான் வாழ்ந்து வருகிறோம். யாரும் உதவி செய்ய முன் வரவில்ைல’ என கண்ணீர் மல்க கூறினார். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அப்போது, மகேஷ்பாபுவின் ஆதார் பெங்களூருவில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து அனுப்பினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 20 ஆண்டு கோமாவில் உள்ள பிஎஸ்எப் வீரருடன் ஆம்புலன்சில் வந்த பெற்றோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஆதார் அட்டைக்கு அலைக்கழிப்பதாக புகார் மனு appeared first on Dinakaran.

Tags : BSF ,Vellore Collector ,Vellore ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!