×

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாலை, மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாலை, மழைநீர் கால்வாய் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகளில் பழுதடைந்த சாலைகள், குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், பழைய சாலைகளுக்கு பதிலாக புதிய சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்று, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை அவ்வப்போது அமைச்சர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூர், ஓட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

குறிப்பாக, கொளத்தூர் கிருஷ்ணதாஸ் பிரதான சாலை, சோமசுந்தரம் நகர், திருவள்ளுவர் சாலை, ரங்கசாயி தெரு, ஜவகர் நகர், பெரியார் நகர், திம்மசாமி தர்கா லைன் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பாதுகாப்புடன் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, பல்லவன் சாலையில் உள்ள கால்பந்து மைதானம், நியாய விலைக்கடை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் பகுதியில் மூலதன நிதியின் கீழ் ரூ.17.39 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்றுள்ளன.

கொசஸ்தலை ஆறு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் சுமார் ரூ.72 கோடி மதிப்பில் 24.50 நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61.30 கோடி மதிப்பீட்டில் 82 கிலோமீட்டர் தூரத்திற்கு 541 சாலைகள் அமைக்கும் பணிகளில் ரூ.28.46 கோடி மதிப்பீட்டில் 42 கி.மீ. தூரத்தில் 302 சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகளையும் மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த சாலை பணிகளை மேற்கொள்ளும்போது சாலையின் மட்டத்தினை சரி செய்து, வடிகாலை நோக்கி மழைநீர் செல்லும் வண்ணம் சாலையினை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலையில் நடக்கும் சாலை அமைக்கும் பணிகளையும் ஆணையர் பார்வையிட்டார். ஆய்வின்போது மத்திய வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மண்டல அலுவலர் முருகன், செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

* சாலையில் பள்ளம் தோண்ட தடை
பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை தடுக்க, சென்னையில் புதிதாக போடப்படும் தார் சாலைகளில் எந்த ஒரு அரசு அல்லது தனியார் நிறுவனம் பள்ளம் தோண்ட கூடாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகர குடிநீர் வாரியம், சென்னை மின்சார வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

*பிளாக் லிஸ்ட்
சென்னையில் பருவ மழைக்கு முன்பாக, வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இந்த பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், தரமாகவும் பணிகள் நடைபெற வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் திருப்திகரமாக இல்லை என்றால், ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்டில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாலை, மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kolathur assembly ,Perambur ,Radhakrishnan ,Kolathur ,Dinakaran ,
× RELATED வங்கியிலிருந்து ரிவார்டு...