×

ஆல்ரவுண்டராக அசத்தினார் சான்ட்னர்: 99 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்; இரண்டாவது வெற்றியுடன் தொடர்ந்து முன்னிலை


ஐதராபாத்: நெதர்லாந்து அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணியை 99 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து தொடக்க வீரர்களாக கான்வே, வில் யங் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது.

கான்வே 32 ரன்னில் வெளியேற, அடுத்து கான்வே – ரச்சின் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தனர். யங் 70 ரன் விளாசி (80 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். ரச்சின் 51 ரன் (51 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), டேரில் மிட்செல் 48 ரன் (47 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச… பிலிப்ஸ் 4, சாப்மேன் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கடைசி கட்டத்தில் கேப்டன் டாம் லாதம், சான்ட்னர் அதிரடியாக விளையாட, நியூசி. ஸ்கோர் 300 ரன்னை தாண்டியது. லாதம் 53 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. சான்ட்னர் 36 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மேட் ஹென்றி 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் ஆர்யன், மீகரன், வண்டெர் மெர்வ் தலா 2, பாஸ் டி லீட் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து… சான்ட்னர், ஹென்றி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 46.3 ஓவரில் 223 ரன் மட்டுமே எடுத்து 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கோலின் ஆக்கர்மேன் அதிகபட்சமாக 69 ரன் (73 பந்து, 5 பவுண்டரி) விளாச, கேப்டன் எட்வர்ட்ஸ் 30, சைப்ரண்ட் 29, நிடமனரு 21, டி லீட் 18, மேக்ஸ் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். நியூசிலாந்து பந்துவீச்சில் சான்ட்னர் 5, ஹென்றி 3, ரச்சின் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆல் ரவுண்டராக அசத்திய சான்ட்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

The post ஆல்ரவுண்டராக அசத்தினார் சான்ட்னர்: 99 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்; இரண்டாவது வெற்றியுடன் தொடர்ந்து முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Santner ,New Zealand ,Netherlands ,Hyderabad ,World Cup League ,Dinakaran ,
× RELATED டி.20 உலக கோப்பை பயிற்சி போட்டி;...