×

அரசு தொகுப்பு வீட்டிற்கு அதிக மின் கட்டணம் வசூல்: கலெக்டரிடம், கூலித்தொழிலாளி புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், வையாவூர் பகுதியை சேர்ந்த பழனி புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், வையாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி விவசாய கூலி வேலை செய்து வருகிறார். பழனி தனது அம்மா, மனைவி மற்றும் 2 மகள்களுடன் அரசு உதவியுடன் கட்டியுள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்.

அரசு உதவியில் கட்டியுள்ள தொகுப்பு வீட்டில் ஒரு மின் விசிறி, ஒரு டியூப் லைட், ஒரு டிவி உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், 2 மாதத்திற்கு ஒருமுறை ரூ.5000, ரூ.6000 என மின்கட்டணம் வருகிறது.
இதனால் பழனி, மின்சார மீட்டரில் கோளாறு இருப்பதாகக்கூறி மாற்றித்தர வேண்டும் என வையாவூரில் அமைந்துள்ள மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கும்போது பணத்தை கட்டி விடுங்கள் மாற்றி தருகிறோம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து, பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

தற்பொழுது செய்யப்பட்ட மின் கணக்கீட்டில் அளவுக்கு அதிகமான வகையில் 26 ஆயிரத்து 850 ரூபாய் அளவிற்கு மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என மின் வாரியம் அறிவிப்பு வழங்கி உள்ளது. இதனால் திடுக்கிட்ட பழனி மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்ட நிலையில், அவரது வீட்டின் மின்சார இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்து விட்டனர். மேலும், 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாததால் தற்பொழுது இவ்வளவு தொகை வந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த விவசாய கூலி தொழிலாளியான பழனி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட காரணத்தால் தனது மகள்கள் தேர்வுக்கும் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு சிறிய வீட்டுக்கு இவ்வளவு மின்சார கட்டணம் வந்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு தொகுப்பு வீட்டிற்கு அதிக மின் கட்டணம் வசூல்: கலெக்டரிடம், கூலித்தொழிலாளி புகார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,People's Grievance Day ,Kalachelvi Mohan ,Palani ,Vaiyavur ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு