×

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு தண்டனை பெற்ற வன அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: வாச்சாத்தி பாலியல் வன்முறை வழக்கில் முதன்மை குற்றவாளியான இந்திய வனப்பணி அதிகாரி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நான்கு இந்திய வனப் பணியைச் (ஐ.எப்.எஸ்) சேர்ந்த அதிகாரிகள் உள்பட 215 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் வாச்சாத்தி பாலியல் வன்முறை வழக்கில் முதன்மையான குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் அறிவித்து தண்டனை பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி எல்.நாதன் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

The post வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு தண்டனை பெற்ற வன அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Vachathi ,Supreme Court ,New Delhi ,Madras High Court ,Indian Forest Service ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...