×

காவிரி தீர்மானத்துக்கு எதிர்ப்பு பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது: பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் இதுபோன்ற நிலையை சந்தித்துள்ளது. இன்றைய சூழலில் இந்த தீர்மானத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்த காரணம் என்ன? கடந்த முறை கர்நாடகத்தில் பாஜ ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற பிரச்னை ஏற்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தாமல், ஒன்றிய அரசை வலியுறுத்த காரணம் என்ன, தமிழக பாஜவுக்கு விவசாயிகளின் நலன் பாதுகாப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு, நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதுதான்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கருத்துகள் பலவிதமாக பேசப்படலாம். ஆனால் தீர்மானம் எப்படி போடப்பட்டுள்ளது என்று படித்தால் புரிந்து கொள்ளலாம்.
சபாநாயகர் அப்பாவு: முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நேற்று முன்தினம் (7ம் தேதி) உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. நீங்கள் திருத்தம் தந்திருந்தால், அதையும் சேர்த்திருக்கலாம்.
அமைச்சர் துரைமுருகன்: நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்பதில் திமுகவுக்கு உடன்பாடுதான்.
வானதி சீனிவாசன்: இந்த தீர்மானத்தில் எங்களுடைய கருத்துகளையும் சேர்த்தால் ஆதரவு தருகிறோம்.
சபாநாயகர் அப்பாவு: அப்படி என்றால் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா? (இந்த நேரத்தில் பாஜ உறுப்பினர்கள் எழுந்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்).

The post காவிரி தீர்மானத்துக்கு எதிர்ப்பு பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,Cauvery ,BJP ,Vanathi Srinivasan ,Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை