×

சின்னமனூர் பகுதியில் முதல்போகம் விளைந்து பொன்னாய் மின்னும் நெல் மணிகள்: அறுவடை தொடங்கியாச்சு: மூட்டை ரூ.1300க்கு விற்பனை

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி விளைந்து பொன்னாய் மின்னுகிறது. அறுவடை தொடங்கியுள்ள நிலையில், மூட்டைக்கு ரூ.1,300க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் முல்லை பெரியாற்று பாசனத்தில் வருடத்தில் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் முதல்போகம் நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நாற்று நடவு செய்து, ஜூன் இறுதியில் நடவுப்பணி தொடங்கியது. நெற்கதிர்கள் நன்றாக வளர்ந்து தற்போது, அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன.

இந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும், நோய் தாக்குதலால் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டன. பின்னர் வேளாண் துறையினர் கொடுத்த மருந்துகளை தெளித்து நெற்கதிர்களை ஒரளவிற்கு காப்பாற்றினர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெற்கதிர்களில் இருந்து பூச்சி தாக்குதல் அழிந்தன. தற்ேபாது, நெற்கதிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதிகளில் நடவு செய்திருந்த 509 ரகம் கொண்ட நெற்கதிர்கள் அறுவடை பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 61 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை 1300க்கு விற்பனையாகிறது. மேலும் விலை அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, துரைசாமிபுரம் பகுதிகளில் 509 ரகம் கொண்டு நெல் அறுவடை பணிகள் தற்போது துவங்கியுள்ளன. 61 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1300 வரை விலை போவதால் மகிழ்ச்சியாக உள்ளோம். ஒரு ஏக்கரில் சுமார் 40 முதல் 48 மூட்டைகள் வரை விளைச்சல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

The post சின்னமனூர் பகுதியில் முதல்போகம் விளைந்து பொன்னாய் மின்னும் நெல் மணிகள்: அறுவடை தொடங்கியாச்சு: மூட்டை ரூ.1300க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Ponnai ,Dinakaran ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்