×

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் பாஜகவை அதிமுக பாதுகாக்கிறது: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் பாஜகவை அதிமுக பாதுகாக்கிறது என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். காவிரி நீர் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக நடைமுறைப்படுத்த வேண்டும்: கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காண முடியவில்லை என்று தான் உச்சநீதிமன்றத்தை நாடுகிறோம். காவிரி விவகாரத்தில் இன்று சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜகவை பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி இன்று பேசியுள்ளார். பாஜக மீதான அதிமுகவின் பாசம் இன்னும் தொடர்கிறது என்று அமைச்சர் ரகுபதி பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவந்து, அது இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கணவரிடம் விவாகரத்து பெற்ற பிறகும், மனைவி மனதின் ஓரத்தில் கணவர் மீது கொஞ்சம் பாசம் இருக்கத்தானே செய்யும் எனச் சொல்வது வாடிக்கை. அதுபோல், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்து அதிமுக விலகினாலும், தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்யும், வஞ்சனை செய்யும் பா.ஜ.க.வை பாதுகாக்கும் எண்ணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படுத்தியது அபத்தமாக உள்ளது.

காவிரியில் நீரைத் திறந்துவிடக் கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி கர்நாடகா நீரைத் திறந்துவிடுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா – தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள் நேரடியாக மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் ஒன்றிய அரசின் கீழ், ஆணையமும் குழுவும் இயங்குகிறது என்பதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லையா? அல்லது உணர்ந்தும் தீர்மானத்தில் ஒன்றிய பா.ஜ.க.வை மட்டும் குறிப்பிட்டிருப்பதை மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாரா என்பது தான் எங்களின் கேள்வி. இந்நிலையில், தீர்மானத்தில் திருத்தம் கேட்பது என்பது அபத்தமானது.

காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், திமுக அரசுக்குத் துணிச்சல் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார். துணிச்சல் மிகுந்த எடப்பாடி பழனிசாமி, துணிச்சலுக்கு பேர் போன நமது முதல்வரைப் பார்த்து இதனைச் சொல்லியுள்ளார். உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர் சொல்வதிலிருந்து தற்போது ஏற்பட்டுள்ள காவிரி பிரச்சனையைத் தீர்த்து கர்நாடகா அரசைத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவைக்க வேண்டிய முழு பொறுப்பு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குத்தான் உள்ளது எனும் உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஒன்றிய அரசு கண்டிப்பாகச் செய்யவேண்டும் எனச் சட்டமன்றத்தில் கூறி இன்று எடப்பாடி பழனிசாமி அவரது துணிச்சலை வெளிப்படுத்தியிருக்கலாம். ஒன்றிய பா.ஜ.க. அரசு இரு மாநிலங்களுக்கிடையே இன மோதலை தூண்டிவிடுகிறது. தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கிறது. துணை ராணுவத்தை அனுப்பி தண்ணீரை பெற்று தரவேண்டும் எனச் சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஒன்றிய அரசைக் கண்டித்து ஒரு சிறிய வார்த்தையைக் கூட பேசவில்லை.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பதால் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை பல்வேறு குற்றச்சாட்டுகளை, முன் வைத்தார் அதற்கு பதில் சொல்ல வேண்டியது நமது கடமை என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்

The post தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் பாஜகவை அதிமுக பாதுகாக்கிறது: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Bajaka ,Tamil ,Nadu ,Minister Ragupathi ,Edabadi ,Chennai ,Minister ,Ragupathi ,Rakupati ,Tamil Nadu ,Minister Rakupati ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ