×

மூணாறு அருகே சுற்றுலாப் பயணிகளை உபசரிக்க நீராவி ரயில் இன்ஜின் மாதிரியில் வடிவமைக்கப்பட்ட நவீன ஓட்டல்: அக்.15ல் பயன்பாட்டுக்கு வருகிறது


மூணாறு: மூணாறு அருகே, கரடிப்பாறை வியூவ் பாயிண்டில் பழமையான நீராவி ரயில் இஞ்சின் மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘டேக் எ பிரேக்’ என்னும் ஓட்டலை வரும் அக்.15ம் தேதி, சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைக்கிறார். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் கடந்த 1908ம் ஆண்டு சரக்குகளை ஏற்றிச் செல்லவும், தேயிலை செடிகளைக் கொண்டு செல்லவும் குண்டளை வாலி நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட ரயில் சேவை பயன்பாட்டில் இருந்தது. அன்றைய தேயிலை தோட்ட உரிமையாளர்களான ஆங்கிலேயர்களுக்காக இந்த ரயில் இயக்கப்பட்டது. 1924ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ரயில் தண்டவாளங்கள் அழிந்து இந்த ரயில் சேவை நின்றது.

இந்நிலையில், மூணாறின் பழைய கால நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், தற்போது இந்த நீராவி ரயில் இன்ஜின் வடிவில் புதுமையான ஓட்டல் ஒன்று பள்ளிவாசல் ஊராட்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் இந்த ஊராட்சியில் உள்ள கரடிப்பாறை வியூவ் பாயிண்டில், ‘டேக் எ பிரேக்’ என்ற திட்டத்தில் இந்த நவீன ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் ஊராட்சியும், சுஜித் மிஷன் இணைந்து சுமார் ரூ.26 லட்சம் செலவில் ரயிலின் பழமை மாறாமல் தண்டவாளங்கள், இன்ஜின் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு ரயிலின் வடிவத்தில் ஓட்டல் கட்டிடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் ரயிலின் சக்கரங்கள், நீராவி இயந்திரம் இடம்பெற்றுள்ளது. இரண்டும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர கண்காணிப்பு கோபுரம் மற்றும் நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொலைதூர காட்சிகளை கண்டு மகிழ உயர்கோபுரம், உணவகம் ரயிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிவாசல் ஊராட்சி தலைவர் பிரதீஷ்குமார் கூறுகையில், ‘எங்கள் ஊராட்சியின் சுற்றுலாவிற்காக பல திட்டங்களை செய்து வருகிறோம்.

மேலும், சுற்றுலாவை வலுசேர்க்கும் விதமாக சாலையோர ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், 2வது மைல் வியூவ் பாயிண்டில் அரசு பஸ் மாதிரி அமைக்கப்பட்டுள்ள உணவகத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்றும் அலை மோதுகிறது. தரமான உணவு வழங்குவதே இதற்கு காரணம். இந்த நீராவி ரயில் இன்ஜின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ள ‘டேக் எ பிரேக்’ கட்டிடத்தை அக்.15ம் தேதி, சுற்றுலாத்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் திறந்து வைக்கிறார் என்று தெரிவித்தார்.

The post மூணாறு அருகே சுற்றுலாப் பயணிகளை உபசரிக்க நீராவி ரயில் இன்ஜின் மாதிரியில் வடிவமைக்கப்பட்ட நவீன ஓட்டல்: அக்.15ல் பயன்பாட்டுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Munnar ,Karadiparai ,Dinakaran ,
× RELATED காடுகளில் உணவு கிடைக்காமல் எஸ்டேட்...