×

3வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்; ஆப்கான் நிலநடுக்க பலி 2,500-ஐ தாண்டியது: நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்ததால் தவிப்பு

காபூல்: ஆப்கான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 2,500-ஐ தாண்டிய நிலையில், 3வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கிறது. நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஹெராட் என்ற பகுதியின் வடமேற்கில் 40 கி.மீ தூரத்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. தொடர்ந்து 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் கிராமப்புற வீடுகள் இடிந்து விழுந்தன. நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்து சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்றுடன் 3வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியின் போது சடலங்கள் குவிந்து கிடக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜெண்டா ஜென் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. 12 கிராமங்கள் நிர்மூலமாகிவிட்டது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றும் கலாசார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன் நேற்று கூறுகையில், ‘நிலநடுக்கத்தால் 2,060 பேர் இறந்துள்ளனர். 1,240 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1,320 பேரின் வீடுகள் முழுவதுமாக தரைமட்டமாகியுள்ளன’ என்றார். ஆனால் இன்றைய நிலவரபடி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து உள்ளதாகவும், மீட்கப்பட்டவர்களில் பலர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் பேரிடர் மீட்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாக ஜன்னன் சயீக் கூறுகையில், ‘இதுவரை 2,445 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக 1,320 வீடுகள் சேதமடைந்தும், இடிந்தும் இருக்கின்றன’ என்றார். பெரும்பாலான வீடுகள் மண்ணால் கட்டமைக்கப்பட்டுள்ளதால், அதிகளவில் மக்கள் பலியானதாகவும் அவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்து கிடப்பதால், அவர்களை கண்டுபிடித்து மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் தவித்து வருகின்றனர்.

The post 3வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்; ஆப்கான் நிலநடுக்க பலி 2,500-ஐ தாண்டியது: நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்ததால் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : earthquake ,Kabul ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்