×

200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிகள் திட்டம் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கு போஷன் அபியான் திட்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்று வருகிறது. இதேபோல், காஞ்சிபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் பயன்பெறும் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, நேற்று மாலை காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமை தாங்கி, 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்று, கர்ப்பிணி பெண்களுக்கு நலங்கு வைத்து, வளையல் அணிவித்து, ஆரத்தி எடுத்து சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தினர்.

இதில் எழிலரசன் எம்எல்ஏ பேசுகையில், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். முன்பெல்லாம் அழகான தமிழ் பெயர்களை சூட்டினர். தற்போது வடமொழி கலந்த அல்லது புரியாத பெயர்களையே சூட்டுகின்றனர். இனியாவது அனைவரும் அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் சன்பிராண்டு ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Tamil Nadu ,of ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு...