×

செங்கல்பட்டில் நெடுந்தூர ஓட்டப்பந்தயம்; வெற்றி பெற்ற 50 பேருக்கு பரிசு, சான்றிதழ்: எம்எல்ஏ, உதவி ஆட்சியர் வழங்கினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நேற்று பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, உதவி ஆட்சியர் ஆனந்த்குமார் சிங் துவக்கி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற 50க்கும் மேற்பட்டோருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியை உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் முன்னிலையில், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி ஒழலூர் வரை சென்று, மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி நிறைவு பெற்றது. இதேபோல், பெண்களுக்கான போட்டி வித்யாசாகர் கல்லூரி வரை சென்று, மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இப்போட்டியில் 5 கிமீ ஓட்டப் பிரிவில் 860 பெண்கள், 10 கிமீ ஆண்கள் ஓட்டப் பிரிவில் 340 பேர், 8 கிமீ ஓட்டப் பிரிவில் 360 ஆண்கள் பங்கேற்றனர். பின்னர் நெடுந்தூர ஓட்டப்பந்தயப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த 4 பேருக்கு தலா ₹5 ஆயிரம், 2வது இடம் பிடித்த 4 பேருக்கு ₹3 ஆயிரம், 3ம் இடம் பிடித்த 4 பேருக்கு ₹2 ஆயிரம் என மொத்தம் 50க்கும் மேற்பட்டோருக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மறைமலைநகர் நகரமன்ற துணை தலைவர் சித்ரா ஆகியோர் வழங்கினர்.
இதில் மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஜெயசித்ரா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் நெடுந்தூர ஓட்டப்பந்தயம்; வெற்றி பெற்ற 50 பேருக்கு பரிசு, சான்றிதழ்: எம்எல்ஏ, உதவி ஆட்சியர் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : MLA ,Chengalpattu ,Tamil Nadu Sports Development Authority ,Anna ,Dinakaran ,
× RELATED 2024-25ம் ஆண்டுக்கான விளையாட்டு...