×

சின்னசேலத்தில் சுற்றித்திரிந்த குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

சின்னசேலம் : சின்னசேலத்தில் சுற்றித்திரிந்த குழந்தையை பள்ளி மாணவன் துணையுடன் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (38). இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்னதுரை தனது 2 வயது மகனை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னசேலம் விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் காலை விட்டு சென்றதாக தெரிகிறது.

அக்குழந்தையை அதே தெருவில் வசிக்கும் கோகுல் (10) என்ற சிறுவன் தன் அரவணைப்பில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான். இதுகுறித்து கேள்விப்பட்ட சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு சென்று அந்த குழந்தையை தூக்கி செல்ல முயன்றார். அப்போது அந்த குழந்தை, தன்னை வைத்திருந்த கோகுலை பிரிய மனமில்லாமல் அழுதது. இதையடுத்து கோகுலுடன் சேர்த்து அந்த குழந்தையை அழைத்து சென்றனர்.

இந்நிலையில் போலீசார், குழந்தையை யார் விட்டு சென்றிருப்பார்கள் என்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்புகளை ஆய்வு செய்து வந்தனர். மேலும் சின்னதுரையின் மனைவி யசோதாவும் தனது குழந்தையை காணவில்லை என்று கணவரிடம் கேட்டபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுவனின் பெற்றோரும் சின்னசேலத்தில் தேடி வந்தனர். இதை கண்ட போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று அறிவுரை கூறி, பின் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை பாதுகாத்து வைத்திருந்த கோகுலை போலீசார் பாராட்டி பரிசு வழங்கினர்.

The post சின்னசேலத்தில் சுற்றித்திரிந்த குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Sinnasalum ,Sinnsalam ,Sinnasalem ,Salem District Headquarters ,Sinnaselam ,
× RELATED பேருந்து கவிழ்ந்து 27 மாணவர்கள் காயம்