×

ஆயுத பூஜை பண்டிகைக்கு மாவட்டத்தில் 450 டன் சாமந்தி பூ அறுவடை

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், வரும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை எதிர்நோக்கி, 450 டன் சாமந்தி அறுவடை செய்யப்படவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாமந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, பூமரத்தூர், தொப்பூர், ஜருகு, காணிகரஅள்ளி, பாளையம்புதூர், சாமிசெட்டிப்பட்டி, கெங்கலாபுரம், தொப்பையாறு டேம் பகுதி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட இடங்களில் சாமந்தி அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை எதிர்நோக்கி, சாமந்தி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் கிணற்றுப்பாசனம் மற்றும் போர்வெல் பாசனத்தில் சாமந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஒருசில இடத்தில், போதிய ஈரம் இல்லாமல் பூக்கள் கருகி உள்ளன. வத்தல்மலை அடிவாரம் பூமரத்தூர், தொப்பூர் பகுதிகளில் சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர். சாமந்தி பூக்கள் கிலோ ₹30 முதல் ₹50 வரை விற்பனையாகிறது.

கோயில் திருவிழா, திருமண விழாக்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சாமந்தி பூக்கள் ஆயுதபூஜைக்காக செல்கிறது. நடப்பாண்டு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி காலத்தில், சுமார் 450 டன் சாமந்தி பூக்கள் அறுவடை செய்யப்படவுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

விவசாயத்தில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்றவை தினசரி வருமானத்துக்கு ஏற்ற பயிர்களாக இருந்தாலும், அவற்றில் முதலிடம் வகிப்பவை பூக்கள் தான். பூ சாகுபடியில் பெரிய தேவையே வேலையாட்கள்தான். இன்றைக்கு வேலை ஆட்கள் கிடைப்பது பிரச்னையாக இருக்கும் நிலையிலும், அதை சமாளித்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறோம். கரும்பு சாகுபடி செய்தால். சர்க்கரை ஆலைகள் உடனே பணம் தருவதில்லை. நெல்லுக்கு நல்ல விலையைத் தேடி செல்வது பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மாற்றுவழி பூக்கள் சாகுபடி தான். பூக்கள் சந்தைக்கு சென்றவுடன், பணம் கைக்கு வந்து விடுகிறது.

இதில் கூடுதலாக லாபம் சம்பாதித்து கொடுப்பவை சாமந்தி பூக்கள் தான். இதில் பல ரகங்கள் உள்ளன. கோ.1 எம்.டி., யூ 1, 2 ஆகியவை மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும். கோ.2 கரும்பழுப்பு நிறத்தில் பூக்களை கொடுக்கும். சந்தைக்கு ஏற்றபடி இவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். சாமந்தி ஒரு வெப்ப, மிதவெப்ப மண்டலப் பயிராகும். செடிகள் நீண்ட இரவு, குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும். ஏக்கருக்கு 9 டன் பூக்கள் அறுவடை செய்யப்படுகிறது.

ஆயுதபூஜையை எதிர்நோக்கி சாமந்தி பூ அதிகளவில் சாகுபடி செய்துள்ளோம். வரும் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை காலக்கட்டத்தில் சுமார் 450 டன் சாமந்தி பூக்கள் அறுவடை செய்யப்படும் என நம்பிக்கை உள்ளது. உள்ளூர் தேவைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிமாநிலம், வெளிமாவட்டத்திற்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாமந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் சாமந்தி பூ அறுவடை செய்யப்படுகிறது. வரும் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை காலக்கட்டத்தில், அதிகளவில் சாமந்தி அறுவடை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்,’ என்றனர்.

The post ஆயுத பூஜை பண்டிகைக்கு மாவட்டத்தில் 450 டன் சாமந்தி பூ அறுவடை appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja festival ,Dharmapuri ,Ayudha Puja and ,Vijayadasami festival ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...