×

கரைமேடு ஊராட்சி பகுதியில் உள்ள வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும்

*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : கரைமேடு ஊராட்சி பகுதியில் உள்ள வாலாஜா ஏரியை தூர்வாரி, சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட கரைமேடு ஊராட்சியில் உள்ள வாலாஜா ஏரி 1300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட நன்னீர் ஏரியாகும்.

நெய்வேலி என்எல்சியின் நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வாலாஜா ஏரியில் 12 அடி ஆழத்திற்கு தேக்கி வைக்கப்பட்டு பின்னர் கிருஷ்ணாபுரம், தலைக்குளம், பின்னலூர், அரியகோஷ்டி, மானம் பாத்தான் வாய்க்கால், முரட்டுவாய்க்கால் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் மூலம் உடையூர், மிராளூர், மஞ்சக்கொல்லை, அம்பாள்புரம், பிரசன்ன ராமாபுரம், உளுத்தூர், பின்னலூர், கரைமேடு, தலைக்குளம், மருதூர், கொளக்குடி, ஜெயங்கொண்டான், எல்லைக்குடி, ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல ஆயிரம் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் வாலாஜா ஏரிக்கு வரும் நீர்வழி பாதைகள் என்எல்சியின் சேறு கலந்த உபரி நீரால் மூடப்பட்டு தூர்ந்துபோய் வருவதால் நீர்வரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதர் மண்டி சம்பு, விழல், உள்ளிட்ட செடிகள் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்து வருகிறது. இதனை தூர்வாருவதற்கான ஆயத்த பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் 15 ஆண்டுகளுக்கு முன் என்எல்சி நிர்வாகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து வாலாஜா ஏரியையும், பரவனாற்றையும் தூர்வாரி புத்துயிர் அளித்தது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் என்எல்சி நிர்வாகம் வாலாஜா ஏரியை விவசாயிகளின் நலன் காக்கவும், அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் வகையிலும் தூர்வாரி அதிக தண்ணீர் தேக்கும் விதமாக ஆழபடுத்தினால் சுற்றுலா தலமாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் இடமாகவும் இந்த ஏரி உள்ளது. இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், பிச்சாவரம் சுற்றுலா தலம் போன்று வடிவமைத்து அலையாத்தி மற்றும் புன்னைமர காடுகள் உருவாக்கி படகு சவாரி ஏற்படுத்தி வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக உருவாக்க வேண்டும், என்றனர்.

The post கரைமேடு ஊராட்சி பகுதியில் உள்ள வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Lake Valaja ,Karaimadu Uradchi ,VALAJA LAKE ,KARAIMADU URADSI ,Dinakaraan ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...