×

வன உயிரின வார விழாவையொட்டி ‘அதிரடி ஆஃபர்’ கொடைக்கானலை சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை

*சுற்றுலாப் பயணிகள் குஷி

கொடைக்கானல் : வன உயிரின வார விழாவையொட்டி, கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று ஒரு நாள் இலவச அனுமதி வழங்கப்பட்டது. வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் பாயிண்ட், பைன் மர காடுகள், குணா குகை, தூண் பாறை, மன்னவனூர் சூழல் பூங்கா ஆகியவை உள்ளன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்கண்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் உரிய கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். வனத்துறை சார்பில் தற்போது வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2ம் தேதி துவங்கிய வன உயிரின வார விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதனையடுத்து சிறப்பு ஏற்பாடாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு நேற்று ஒரு நாள் இலவச அனுமதியளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனைத்து இடங்களையும் கண்டு ரசித்தனர். வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளான சுற்றுலாப்பயணிகள் நேற்று கொடைக்கானல் வந்திருந்தனர். வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு இலவச அனுமதியால் அவர்கள் கூடுதல் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த வாரம் இருந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் பல இடங்களை ரசிக்க முடிந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்

கும்பக்கரையில் கொண்டாட்டம்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது தமிழகம் முழுவதும் வனவிலங்கு பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனையொட்டி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொடைக்கானல் வனக்கோட்ட சரகம் சார்பாக வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று கொடைக்கானல் வனக்கோட்டத்தில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அனைத்து பகுதிகளிலும் கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
அதுபோல், கும்பக்கரை அருவியிலும் கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

The post வன உயிரின வார விழாவையொட்டி ‘அதிரடி ஆஃபர்’ கொடைக்கானலை சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Wildlife Week ,Khushi Kodaikanal ,Wildlife Week Festival ,Forest Department ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...