*புகைப்படங்களுடன் கேரள போலீஸ் நோட்டீஸ் வெளியீடு
பந்தலூர் : மாவோயிஸ்ட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் கேரள மாநில காவல்துறை அறிவித்துள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் 30க்கும் மாவோயிஸ்ட்கள் தலைமறைவாக வசிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே கம்பமலை பகுதியில் கேரள வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேயிலைத் தோட்டம் பகுதியில் உள்ள அலுவலகத்தை சீருடை அணிந்து துப்பாக்கியுடன் வந்த 6 மாவோயிஸ்ட்கள் அடித்து உடைத்து சேதம் செய்தனர். பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் சுவரொட்டிகள் ஒட்டிச்சென்றனர்.
தற்போது கேரள மாநில போலீசார் 16 மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சந்து, விமல்குமார், அனீஸ்பாபு, கார்த்திக், ரமேஷ் உள்ளிட்ட 6 பேர், கேரளாவை சேர்ந்த 4 பேர், கர்நாடகாவை சேர்ந்த 8 பேர் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் வயநாடு கம்பமலை எஸ்டேட் பகுதியில் கேரளாவை சேர்ந்த மாவோயிஸ்ட் மொய்தீன் தலைமையில் தாக்குதல்கள் நடத்தியதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும், சுவரொட்டிகள் ஒட்டி அச்சுறுத்தும் மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், ஊர் விபரம் குறித்து ரகசியமாக வைக்கப்படும் எனவும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ேநாட்டீஸை தமிழ்நாடு, கேரள எல்லை பகுதிகளான கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள மலைக்கிராமப் பகுதிகளிலும் கேரள மாநில காவல்துறையினர் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர்.
The post 16 மாவோயிஸ்ட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் appeared first on Dinakaran.