×

கோபி அருகே போதைக்கு அடிமையானதால் கஞ்சா வாங்க ஆடு, சேவல்கள் திருடிய கல்லூரி மாணவர்கள்

*‘மாஸ்டர் பிளான்’ தவிடுபொடியானது

கோபி : கோபி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள், கஞ்சா வாங்க ஆடு, சேவல்களை திருடி விற்ற சம்பவம் அம்பலமானது. இச்சம்பவத்தில் 3 மாணவர்களை கோபி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கருக்கம்பாளியை சேர்ந்தவர் தவசியப்பன் (58). விவசாயி. இவர் வளர்த்து வந்த சேவல் மற்றும் ஆடு ஒன்றை இரு சக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் திருடிச்செல்வதை தவசியப்பன் பார்த்துள்ளார். இதையடுத்து திருடர்களை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றயார். அப்போது, அவரை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு அந்த நபர்கள் தப்பினர். இதில் படுகாயமடைந்த தவசியப்பன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தவசியப்பன் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

நம்பியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோசனம் கிராமத்தில் நாச்சிமுத்து என்பவரது ஆடு, ஆலாம்பாளையத்தை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கு சொந்தமான ஆடு, கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள், சிறுவலூர் காவல் நிலைய பகுதியில் 2 ஆடுகள், 4 சேவல்கள் என அடுத்தடுத்து திருடு போனது. இது குறித்து கோபி, சிறுவலூர், நம்பியூர், கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கோபி அருகே உள்ள கருக்கம்பாளியில் தவசியப்பனை தாக்கி விட்டுச்சென்ற இருவர் குறித்த சிசிடிவி கேமரா பதிவு கோபி போலீசாருக்கு கிடைத்தது. அதை ைவத்து அந்த இருவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று மாலை கோபி அருகே உள்ள கல்ராமணி பிரிவில் கோபி எஸ்ஐ ஆறுமுகம் தலைமையில் எஸ்ஐக்கள் ஜெகநாதன், சகாயராஜ், தலைமை காவலர்கள் சதாசிவம், பெருமாள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக 2 ஸ்கூட்டர்கள், ஒரு பைக்கில் 3 ஆடுகள் மற்றும் ஒரு சேவலுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய தனிப்படையினர் முயற்சித்தனர். அப்போது 3 பேரும் இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். இதைத்தொடர்ந்து தப்பியோடிய 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போதுதான் அவர்கள் அடுத்தடுத்து ஆடு மற்றும் சேவல்களை திருடிய கும்பல் என்பது தெரிய வந்தது.

அவர்களில் ஒருவர் கோபி சாய் அபிராமி நகரை சேர்ந்த கவின் (19) என்பதும், சத்தியமங்கலம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருவதும், மற்றொருவர் கோபி அருகே சிறுவலூர் அங்கம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரஞ்சித்குமார் (21) என்பதும், சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. சி.இ 4-ம் ஆண்டு படித்து வருவதும், மற்றொருவர் கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரேசனின் மகன் ஹரி பிரசாத் (20) என்பதும், கோபியில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

3 பேரும் சில கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து கோபியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அங்கு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கஞ்சா புகைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கஞ்சா போதை பொருளை வாங்குவதற்காக பணம் தேவைப்பட்ட போதெல்லாம் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆடு மற்றும் சேவல்களை திருடி விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் கஞ்சாவிற்கு செலவு செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த கோபி போலீசார் 8 ஆடுகள், 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். 3 மாணவர்களும் கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். திருடப்போன இடத்தில் பொதுமக்களிடமும், போலீசிலும் சிக்கிக்கொண்டதால் இவர்களின் ‘மாஸ்டர் பிளான்’ தற்போது தவிடு பொடியாகியுள்ளது.

The post கோபி அருகே போதைக்கு அடிமையானதால் கஞ்சா வாங்க ஆடு, சேவல்கள் திருடிய கல்லூரி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Kobe ,Kobi ,
× RELATED திருச்சூர் தொகுதி பாஜ வேட்பாளர்...