×

46 செம்மறி ஆடுகள் பலியிட்டு கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கம கமக்கும் கிடா கறி விருந்து

*கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதத் திருவிழா

கமுதி : கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில் 46 ஆடுகள் பலியிட்டு கமகம கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு கிராம கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் பீடம் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா இங்கு நடைபெறும். திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வாரம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை.

இந்த திருவிழாவுக்காக முதல்நாடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஆண்கள் மட்டும் ஒன்றுகூடி கால் படாத மண் எடுத்து பீடம் அமைத்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்தனர். பின்னர் 46 செம்மறி ஆடுகளை பலியிட்டு, கைக்குத்தல் அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டது.பின்னர் பச்சரிசி சாதம் உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கறி விருந்தில் ஆண்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால், மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருவிழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலர் மாலையுடன் வந்து அம்மனை வழிபட்டனர்.
கறி விருந்து என்றால் மது குடித்து கறி சாப்பிடுவது வழக்கம். ஆனால் இங்கு மது அருந்தி வந்தால் தண்டனை என்பதால் யாரும் மது அருந்துவது இல்லை. இதனால் இங்கு போலீஸ் பாதுகாப்பும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post 46 செம்மறி ஆடுகள் பலியிட்டு கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கம கமக்கும் கிடா கறி விருந்து appeared first on Dinakaran.

Tags : Kamudi Kamudi ,Kamudi ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி