×

அதிமுகவின் 52வது தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை: அதிமுகவின் 52வது தொடக்க விழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 17, 18 மற்றும் 26, 28 ஆகிய 4 நாட்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் 2023, அக்டோபர் 17, 18 மற்றும் 26, 28 கழக நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமாம் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ 17.10.2023 செவ்வாய்கிழமையன்று 52-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2023, 18.10.2023, 26.10.2023, 28.10.2023 ஆகிய 4 நாட்கள் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், “நமது புரட்சித் தலைவி அம்மா” நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17.10.2023 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில், கழகத்தின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டதன் விபரங்களையும்; கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் குறித்த விபரங்களையும்; அதே போல், தங்கள் மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் விபரங்களையும் தலைமைக் கழகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post அதிமுகவின் 52வது தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : 52nd Opening Ceremony ,Edabadi ,Blackberry ,52nd Inauguration Ceremony ,Edatpadi Pannisami ,
× RELATED கருப்பையைக் காக்கும் கருப்பட்டி!