×

44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது: தாம்பரத்தில் கடும் நெரிசல்

 

சென்னை: சென்னையில் நேற்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே நேற்று காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த வழித்தடத்தில் 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை ரத்து செய்யப்பட்டது.

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான சேவை காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டது. மேலும், செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1 மணி, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல், காலை 9.40, 10.20, 10.55, 11.30 மற்றும் மதியம் 12, 12.20, ஒரு மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதேபோல், திருநின்றவூர்- திருவள்ளூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் முதல் திருத்தணி வரை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் வசதிக்காக, திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் வரை இடைநில்லா சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டன.

ரயில்கள் ரத்து காரணமாக, சென்னை சென்ட்ரல், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் சென்னர். பெரும்பாலான வழித்தட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் அதிகப்படியான பயணிகள் குவிந்ததால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

The post 44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது: தாம்பரத்தில் கடும் நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Kodambakkam ,Tambaram… ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்