×

அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் 14 பேர் பலி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்ததற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். ராமதாஸ் (பாமக நிறுவனர்): கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்தரசன் (கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்): அத்திப்பள்ளி விபத்தில் இருந்து போன தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் அரூர் அம்மாபேட்டை வாணியம்பாடி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து சென்றவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், எதிர் காலத்தில் விபத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேவையான திருத்தங்களை செய்து, வரைமுறைகளை உருவாக்கி கடுமையாக அமலாக்க வேண்டும். இதில் தவறு நிகழுமானால் அனுமதியளிக்கும் அலுவலரும் பதிலளிக்கும் பொறுப்பேற்க செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த தமிழக எல்லைப் பகுதியின் அருகே ஒரு சில மீட்டர் தொலைவில், கர்நாடகா மாநிலத்திற்குட்பட்ட அத்திப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருள்களை மிகுந்த கவனத்துடன், அரசின் விதிமுறைகளை முறையாக கையாள வேண்டும். சிறிய கவனக்குறைவும் விலை மதிக்கமுடியாத உயிர் போக நிறைய வாய்ப்புள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்ததை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

The post அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் 14 பேர் பலி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Attipakli firework crash ,Attipalli firework crash ,RAMADAS ,BAMAKA ,Dinakaraan ,
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...