×
Saravana Stores

இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது பாஜவை எதிர்ப்பதாக அதிமுக கூறுவதை ஏற்க இயலாது: முதல்வருடனான சந்திப்புக்கு பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பாஜவின் துரோகத்திற்கு துணை இருந்துவிட்டு, இப்போது எதிர்ப்பதாக அதிமுக கூறுவதை ஏற்க இயலாது என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு பின்னர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: சிறுகுறு தொழில்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதிமுக அரசு போன்று இல்லாமல், அவர்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. இருப்பினும் சில பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதை தீர்க்க வற்புறுத்தினோம். இந்தியா கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் மாநில உரிமை பாதுகாப்பு, மாநில சுயாட்சி பாதுகாப்பு மாநாடு நடத்த நினைவூட்டினோம். அதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்கள் சந்திக்கக் கூடிய பல்வேறு பிரச்னைகளை விளக்கி கூறினோம். அதனை முதல்வர் நிதானமாக உள்வாங்கிக் கொண்டார். காவிரி நதிநீர் பிரச்சனையில், அக்டோபர் 11ம் தேதி அன்று டெல்டா மாவட்டங்களில் பந்த் நடத்த உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்திற்கு சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். சட்டமன்ற கூட்டம் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். அவற்றை நிறைவேற்ற பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார். ஆசிரியர்களின் போராட்டத்தையொட்டி அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி சில தீர்வுகளை சொல்லியிருக்கிறது. கைது போன்ற நடவடிக்கைகள் நல்ல விளைவை ஏற்படுத்தாது. எனவே, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிக்கை வாயிலாக அரசை வற்புறுத்தினோம்.

இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. பேச்சுவார்த்தை, இடப்பகிர்வு வரும் போது ஏற்கெனவே இருப்பதை அதிகரிக்க முயற்சிப்போம். அதிமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதிமுக, பாஜ ஒன்றாக இருந்தபோது எப்படி எதிர்த்தோமோ அதேபோன்று பிரிந்திருந்தாலும் அந்த கட்சிகளை எதிர்த்து போராட்டம் தொடரும். 9 ஆண்டுகாலம் பாஜ செய்த அனைத்து விதமான துரோகத்திற்கும் அதிமுக உடன்பட்டு நின்றது. தற்போது, எதிர்க்கிறோம், மாறிவிட்டோம் என்று அதிமுக கூறுவதை ஏற்றுக்கொள்வது சிரமம்.

The post இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது பாஜவை எதிர்ப்பதாக அதிமுக கூறுவதை ஏற்க இயலாது: முதல்வருடனான சந்திப்புக்கு பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Supreme ,Bajj ,K. ,Balakrishnan ,KK ,Supreme Leader ,Bajav ,Aimurukh ,Bajaj ,K.K. Balakrishnan ,
× RELATED டெல்லியில் பட்டாசுகளுக்கு...