×

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானம் ஓட தொடங்கியபோது இயந்திரத்தில் திடீர் கோளாறு: விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை:சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று காலை 10:05 மணிக்கு 142 பயணிகள் செல்ல இருந்தனர். அந்த விமானம், டெல்லியில் இருந்து காலை 8:50 மணிக்கு, சென்னை வந்து பயணிகளை அழைத்து செல்ல வேண்டும். இந்நிலையில், டெல்லிக்கு காலை 10:05 மணிக்கு செல்லும் வகையில் பயணிகள் விமானத்தில் அமர்ந்திருந்தனர். இதையடுத்து, விமானம் ஓடு பாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு உள்ளதை கண்டறிந்தார். இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார். இது குறித்து விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனால் விமானம் ஓடுபாதையிலிருந்து, திரும்பி வந்து நிறுத்தப்பட்டது.

பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறக்கப்பட்டு, ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் இயந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானம் தாமதமாக காலை 11:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு மாலை 3 மணிவரை சரி செய்யப்படவில்லை. இதனால் 142 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் 6 மணிநேரமாக தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை மாற்று விமானங்கள் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, வானில் பறக்க தொடங்குவதற்கு முன்னதாகவே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறுகளை, விமானி கண்டுபிடித்து உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 142 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 149 பேர் உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானம் ஓட தொடங்கியபோது இயந்திரத்தில் திடீர் கோளாறு: விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Air India ,Delhi ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்