×

ஞாயிறு விடுமுறை நாளில் முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சென்னை: விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி முதலை பண்ணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சென்னை அடுத்த வடநெம்மேலி இசிஆர் சாலையொட்டி முதலைப் பண்ணை உள்ளது. இது, ஆசியாவிலேயே மிகப்பெரிய முதலை பண்ணையாக உள்ளது. இங்கு, அமெரிக்காவில் உள்ள அலிகேட்டர், நன்னீர் முதலைகள், நீள வாய் உடைய முதலைகள், சதுப்பு நிலத்தில் வாழும் முதலைகள், உப்பு நீரில் வாழும் முதலைகள் உள்ளிட்ட அரியவகை முதலைகள் இங்குள்ள குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அமேசான் மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் உள்ள நீர் நிலைகளில் வாழ்ந்து, மனிதர்களை அப்படியே விழுங்கும் மிகப்பெரிய ராட்சத முதலைகளும் இங்குள்ளது.

இந்நிலையில், நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், நேற்று காலை முதல் மாலை வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த முதலை பண்ணைக்கு வந்தனர். அங்கு, நுழைவு கட்டணம் செலுத்திய பின்னர் முதலைகளை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சுற்றுலாப் பயணிகள் முதலைகள் வெளியே வராமல் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சில, சுற்றுலாப் பயணிகள் கம்பி வேலிக்கு அருகே சென்றபோது முதலைகள் பயணிகளை நோக்கி வந்தது. அப்போது, அங்கிருந்த பயணிகள் பயந்து ஓடியதையும் காண முடிந்தது. இதேபோல், மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பத்தில் உள்ள புலிக்குகை, மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்திலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து புரதான சின்னங்களை கண்டு ரசித்தனர்.

The post ஞாயிறு விடுமுறை நாளில் முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vadanemmeli crocodile ,Mamallapuram ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...