×

அமெரிக்காவில் ஐடி நிறுவன உரிமையாளர் ; சென்னையில் டாக்ஸி ஓட்டுநர் அதிமுகவுக்கு நிதி கொடுக்காததால் ரோட்டில் வாழும் கோடீஸ்வரர்: ரூ.30 கோடிக்கு டெண்டரை கொடுக்காமல் கேரள நிறுவனத்துடன் ரூ.193 கோடிக்கு ஒப்பந்தம்

* அதிமுக ஆட்சியில் செல்லூர் ராஜூ முன்னிலையில் நடந்த பரபரப்பு பேரம்

மதுரை: அமெரிக்காவில் ஐடி நிறுவன உரிமையாளராக கொடி கட்டி பறந்த கோடீஸ்வரர், சென்னையில் அதிமுகவுக்கு நிதி கொடுக்காததால் சாலையோரம் வசித்து டாக்ஸி ஓட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்தவர், நவமணி வேதமாணிக்கம் (60). 1980களில் மதுரையில் பள்ளிக்கல்வியையும், விருதுநகர் மற்றும் சென்னையில் கல்லூரி கல்வியையும் முடித்தார். பின், 1989ல் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியில் சேர்ந்த இவர், திறமையாக பணிபுரிந்ததால் அங்கிருந்து நிறுவனம் சார்பில் அமெரிக்காவின், சிகாகோ நகரில் உள்ள நிறுவனத்தின் கிளைக்கு பணியாற்ற, 1992ல் அனுப்பப்பட்டார். அங்கு சென்று 1995 வரை பணிபுரிந்து வந்த நவமணி வேதமாணிக்கம், 1996ல் ‘டாஷ்டி-இங்க்’ என்ற பெயரில் ஐடி நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தை தொடங்கிய மூன்று ஆண்டுகளிலேயே அந்நாட்டின் டாப் 25 நிறுவனங்களுள் 19 இடத்தில் தனது நிறுவனத்தை இடம் பெறச் செய்தார். அமெரிக்காவில் பணிபுரிந்தாலும் ‘சொந்த மண்ணில் வாழும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என எண்ணி அமெரிக்காவில் இருந்த தனது நிறுவனத்தை மூடிவிட்டு, 2007ம் ஆண்டு சென்னைக்கு வந்து ஐடி நிறுவனத்தை தொடங்கி 125 தமிழக மென்பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்.

இங்கும் தொழிலில் கொடிகட்டி பறந்த அவர் கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களை தனியார் மயமாக்குவதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டரை எடுக்க விண்ணப்பித்தார். அதிமுகவினரின் சதியால் தொழிலில் நஷ்டம் அடைந்ததுடன், கோடீஸ்வரராக இருந்த நவமணி வேதமாணிக்கம் தற்போது சென்னை அண்ணாநகரில் சாலையில் வசித்தபடி டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, நவமணி வேதமாணிக்கத்திடம் கேட்டபோது அவர், கூறியதாவது: சென்னையில் எனது நிறுவனம் சார்பில் வங்கிகளை போன்றே கூட்டுறவு சங்கங்களை இணையத்தின் வாயிலாக இணைக்கும் விதமாக ‘டெக்நெட் சொசைட்டி’ என்ற பெயரில் புதிதாக மென்பொருளை உருவாக்கினோம். அதை 2012ல் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பார்த்து சென்றனர். பின் அதைபோலவே கூட்டுறவுத்துறைக்கும் தனியாக மென்பொருள் உருவாக்கி கொடுக்க வேண்டுமென கூறியதால் பிரத்யேகமாக மென்பொருள் தயாரித்தோம். அதை அப்போதைய அண்ணா பல்கலையின் கணினித்துறை தலைவர் டாக்டர் செல்லப்பா தலைமையிலான குழுவும் எல்காட், நிக் உள்ளிட்ட நிறுவனத்தின் குழுவினரும் ஆய்வு செய்து பயன்படுத்தலாம் என, அறிக்கை அளித்தனர். ஆனால் மென்பொருளை வாங்காமல் அப்போதைய அதிமுக ஆட்சியாளர்கள் இழுத்தடித்து வந்தனர்.

இச்சூழலில் 2012ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். அதற்கான டெண்டர் விடும் பணிகளும் துவங்கிய நிலையில் அப்போதைய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அமைச்சர் அலுவலகம் சென்ற என்னிடம், கட்சியின் வளர்ச்சி நிதி கொடுக்க வேண்டுமென அமைச்சரின் உதவியாளர்களும், அதிகாரிகளும் கேட்டனர். இவை அனைத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் நடந்தது. எனினும் பணம் கொடுக்க விருப்பமில்லாததால் அதை மறுத்தேன். இதனால் என்னை பழிவாங்கும் விதமாக மென்பொருள் உருவாக்கும் பணிகளில் அதிகாரிகள் கறார் காட்ட ஆரம்பித்தனர். எங்கள் தரப்பில் இருந்து ரூ.30 கோடி வரை மென்பொருள் தயாரிக்க குறிப்பிட்டிருந்த நிலையில், ரூ.6 கோடிக்குள் தயாரித்து கொடுக்க நிர்ப்பந்தம் செய்தார்கள். அதையும் முடித்து கொடுத்த பின்பும், அடுத்தடுத்த ஆர்டர்களை கொடுக்காததுடன் எங்களின் செலவுகளுக்கும் பணம் கொடுக்காமல் இருந்தார்கள். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணமும் கிடைக்காமல், புதிய ஆர்டர்களும் கிடைக்காததால் எனது நிறுவனம் படிப்படியாக நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது.

அதனால் 125 பேர் பணிபுரிந்த நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 30க்கும் கீழ் சென்றது. இருப்பினும் 2016ல் தமிழகம் முழுவதும் உள்ள 1,240 பணியாளர் சங்கங்களுக்கு மென்பொருள் கேட்டு விடப்பட்ட டெண்டரை எடுக்க எனது நிறுவனமும், டிசிஎஸ் மற்றும் ஸ்டேட் பாங்கின் மென்பொருள் நிறுவனமும் இணைந்து ‘சி-எட்ஜ் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் விண்ணப்பித்தோம். எங்களுக்கு கொடுக்காமல் முன் அனுபவம் இல்லாத கேரள நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்தனர். அந்த டெண்டரை எடுக்க நாங்கள் ரூ.30 கோடி குறிப்பிட்டிருந்த நிலையில் அந்த கேரள நிறுவனத்துக்கு ரூ.193 கோடிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அதுவும் அடுத்த சில நாட்களில் ரத்தானது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், எனது நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் வாயிலாகவே என்னை அழிக்க தூண்டிவிட்டனர். அதனால் தற்போது எனது எல்லா சொத்துக்களையும் இழந்து குடும்பத் தேவையை பூர்த்தி செய்ய டாக்ஸி ஓட்டுகிறேன். ஆனால் என் போராட்டத்தை கைவிடவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ‘‘யாராவது, எதையாவது சொல்வார்கள்…’’ எனக்கூறி இணைப்பை துண்டித்து விட்டார். கடல் கடந்து சென்று, தான் கற்ற அறிவை வைத்து அயல்நாட்டில் தன் பெயரை நிலைநாட்டிய தொழிலதிபராகிய ஒரு தமிழன், லஞ்ச ஊழலில் சிக்கி டாக்ஸி ஓட்டுநரான நிலை காண்போரை பெரும் வேதனைக்குள்ளாக்கி உள்ளது.

The post அமெரிக்காவில் ஐடி நிறுவன உரிமையாளர் ; சென்னையில் டாக்ஸி ஓட்டுநர் அதிமுகவுக்கு நிதி கொடுக்காததால் ரோட்டில் வாழும் கோடீஸ்வரர்: ரூ.30 கோடிக்கு டெண்டரை கொடுக்காமல் கேரள நிறுவனத்துடன் ரூ.193 கோடிக்கு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : ID ,USA ,Rotil ,Chennai ,Kerala ,CELLUR ,RAJU ,MADURAI ,UNITED STATES ,Kerala Corporation ,Dinakaraan ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!