×

ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் 49 ஆயுள் சிறை கைதிகளை பரோலில் விடுவிக்க வேண்டும்: அரசுக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை

சென்னை: ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் 49 ஆயுள் சிறைக்கைதிகளை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விசிக, தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார்.

ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் அந்த பரிந்துரையில் இடம்பெற்ற 3 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உள்பட 5 பேருக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இப்படியாக நீதிமன்ற தலையீடு இல்லாமல் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலையோ அல்லது பரோலோ கிடைக்கவில்லை என்கிற சூழலே நிலவி வருகின்றது. இந்த விவகாரத்தில் அரசு கொள்கை ரீதியாக விடுதலை முடிவை மேற்கொண்டுள்ள நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், 49 ஆயுள் சிறைக்கைதிகளையும் வழிக்காவல் இல்லாத பரோலில் விடுதலை செய்ய வேண்டும். ஆகவே, இன்று தொடங்கவுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும். மேலும், இக்கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் அழுத்தம் தரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் 49 ஆயுள் சிறை கைதிகளை பரோலில் விடுவிக்க வேண்டும்: அரசுக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Governor ,STPI ,Govt. CHENNAI ,Dinakaran ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...