×

இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமானது 2 நாளில் 1000 பேர் பலி: தரைவான்கடல் வழியாக தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள்

* பதிலடியாக குண்டு மழை பொழியும் இஸ்ரேலிய படைகள்; காசாவை தரைமட்டமாக்கும் வரை போர் தொடரும் – பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, காசா முனை மீது இஸ்ரேல் படைகள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. 2ம் நாளாக தீவிரமடைந்துள்ள போரில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, காசாவை தரைமட்டமாக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சூளூரைத்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை பிரித்து கடந்த 1948ம் ஆண்டு புதிய நாடாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்னை தீராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நேற்று முன்தினம் அதிகாலை இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதலை நடத்தியது. வெடிகுண்டு வைத்து எல்லை வேலிகளை தகர்த்த ஹமாஸ் தீவிரவாதிகள் அதன் வழியாக இருசக்கர வாகனத்திலும், பாரா கிளைடிங்கில் வான் வழியாகவும், சக்திவாய்ந்த படகுகள் மூலம் கடல் மார்க்கமாகவும் எல்லையில் உள்ள 22 நகரங்களில் ஊடுருவினர். அங்கு கண்மூடித்தனமாக பலரை சுட்டுக் கொன்றனர். வெளிநாட்டவர்கள் உட்பட ஏராளமான இஸ்ரேலியர்களை பணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும், 5,000 ராக்கெட்களை ஏவி இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் தாக்குதலும் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக போரை பிரகடனப்படுத்தினார். இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் காசாவை முற்றுகையிட்டு குண்டு மழை பொழிந்தன. ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவிய தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு ராணுவம் விரைந்தது.

இந்நிலையில், 2வது நாளாக இப்போர் நேற்று தீவிரமடைந்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே எச்சரித்திருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, காசாவை தரைமட்டமாக்கும் வரை ஓய மாட்டோம் என நேற்று சூளூரைத்தார். அதே போல், நேற்று முன்தினம் இரவிலிருந்து விடியவிடிய காசா மீது 3,000 ராக்கெட்களை ஏவி இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் காசாவின் பல குடியிருப்பு கட்டிடங்கள் தகர்ந்தன. 14 மாடி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் நொறுங்கின. காசாவின் 462 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. முன்னதாக, இஸ்ரேல் எச்சரிக்கையை தொடர்ந்து, 20,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காசாவின் உள் பகுதியில் உள்ள ஐநா நடத்தும் பள்ளிகளில் தஞ்சமடைந்தனர். ஒருபுறம் வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம், மறுபுறம் எல்லை நகரங்களில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். பல தெருக்களிலும் துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.

காசா எல்லைக்கு அருகில் உள்ள ஒவ்வொரு பகுதியாக இஸ்ரேல் துருப்புக்கள் நகர்ந்து வருவதாகவும், அங்கு அவர்கள் அனைத்து பொதுமக்களையும் வெளியேற்றவும், தீவிரவாதிகளை தேடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டில் பதுங்கியுள்ள ஒரு தீவிரவாதியையும் உயிருடன் விடமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இந்த 2 நாள் சண்டையில் இஸ்ரேல் தரப்பில் 600 பேர் பலியான அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. காசா மீதான பயங்கர தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 400 பேர் வரை இறந்துள்ளனர். இதன் மூலம் 2 நாளில் 1000 பேர் பலியாகி உள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல், பாலஸ்தீன மோதலில் இவ்வளவு உயிர்கள் பலியாவது இதுவே முதல் முறை. காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேல் துண்டித்துள்ளதால், மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர். இனி அடுத்த பல நாட்களுக்கு எரிபொருள் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்காது. இந்த போர் முடிவுக்கு வர நீண்ட நாள் எடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனால் தரை வழியாக இஸ்ரேல் ராணுவம் காசாவில் நுழையும் பட்சத்தில் அது அதிகப்படியான உயிர்பலிக்கு வழிவகுக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

அதே சமயம், ஹமாஸ் தீவிரவாதிகள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரை பிடித்துச் சென்றிருப்பதாகவும், பணயக் கைதிகளை வைத்து இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை விடுவிக்க பேரம் பேசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாட்டவர்களும் உள்ளனர். இதனால் சர்வதேச நாடுகள் இதில் கவலை கொண்டுள்ளன. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதாக அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாலஸ்தீனத்தை பாதுகாக்க முழு உரிமை உண்டு என ஹமாசுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது.

* இசை நிகழ்ச்சியில் நடந்த கொடூரங்கள்

ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தும் சமயத்தில் காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேலின் நெகேவ் பாலைவனப் பகுதியில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான வெளிநாட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த இடத்தில் பாராகிளைடிங் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்துள்ளனர். அவர்கள் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியதும், இசை நிகழ்ச்சியில் ஆடிப்பாடிக் கொண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த கூட்டத்தில் கையில் கிடைத்தவர்களை பணயக் கைதியாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். இதில் ஜெர்மனியை சேர்ந்த டாட்டூ பெண் கலைஞர் ஷானி லோக் (30) என்பவரை கொலை செய்து அரை நிர்வாண கோலத்தில் வாகனத்தின் பின்பக்கம் சடலத்தை போட்டு ஹமாஸ் தீவிரவாதிகள் கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. கொல்லப்பட்ட நபர் இஸ்ரேல் ராணுவ வீரர் என ஹமாஸ் கூறியிருந்த நிலையில், அவர் ஷானி லோக் என்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது போல பல வெளிநாட்டவர்களை ஹமாஸ் தீவிரவாதகள் பணயக் கைதியாக பிடித்து சென்றுள்ளனர். மாணவி ஒருவரை பைக்கில் கொண்டு செல்லும் தீவிரவாதிகள், அவரது ஆண் நண்பரை கைகளை கட்டி இழுத்துச் செல்லும் வீடியோக்கள் நேற்று வெளியாகின. அந்த மாணவி தன்னை கொல்ல வேண்டாம் எனவும், ஆண் நண்பரை விட்டு விடுமாறும் கெஞ்சியபடி செல்கிறார்.

* வரும் 14ம் தேதி வரை ஏர் இந்தியா சேவை ரத்து

இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடக்கும் நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வுக்கு இயக்கும் விமான சேவையை வரும் 14ம் தேதி வரை ரத்து செய்திருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

* 44 வீரர்கள் பலி

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 44 இஸ்ரேலிய ராணுவ வீரர்களும், 30 பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பலியான ராணுவ வீரர்கள் பெயரை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

* இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், வைர தொழில் செய்யும் தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் அங்கு சிக்கி உள்ளனர். அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், எந்த அசம்பாவித சம்பவங்களும் பதிவாகவில்லை என இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகமும், பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய பிரதிநிதி அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

பலரும் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், வாட்ஸ் அப் மூலம் இந்திய தூதகரத்தை தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் கூறுகையில், ‘‘இங்கு நிலைமை பயங்கரமாக உள்ளது. ஆனாலும், நானும் குடும்பத்தினரும் பாதுகாப்பாக உள்ளோம். இன்டர்நெட் இணைப்பு மற்றும் மின்சாரம் இல்லை. நிலைமை பயமாக இருக்கிறது’’ என்றார். இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்துவதாக டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று ஆலோசனை தெரிவித்துள்ளது. தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும், தங்குமிடத்திலேயே பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவுறுத்தல் ஆங்கிலம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

The post இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமானது 2 நாளில் 1000 பேர் பலி: தரைவான்கடல் வழியாக தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் appeared first on Dinakaran.

Tags : Israel ,-Palestine ,Hamas ,Taraiwankal ,Gaza ,Netanyahu ,Palestinian ,Taryavankal ,Dinakaraan ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்